Skip to main content

ஜாமீன் விவகாரம் - பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு நிபந்தனை விதித்த உயர்நீதிமன்றம்

Published on 29/08/2022 | Edited on 29/08/2022

 

ரகத

 

ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அசல் முகமது ஜின்னா, “ஸ்ரீமதி பள்ளி வளாகத்தில் மரணமடைந்துள்ளார். அந்த மரணத்திற்கு பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். ஏற்கனவே இந்தப் பள்ளி வளாகத்தில், சந்தேகத்திற்கான இடமான வகையில் பல மரணங்கள் நடந்துள்ளன. அதில் ஒரு வழக்கில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், கொலை குற்றம் சாட்டப்பட்டு, அதன் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே, ஸ்ரீமதியின் மரணம் ஒரு சந்தேகத்திற்குரிய மரணம். இதைப்பற்றி விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, இவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது” என வாதிட்டார். 

 

ஸ்ரீமதியின் தாயார், செல்வியின் வழக்கறிஞரான சங்கர சுப்பு, “ஸ்ரீமதியின் உடம்பில் பல காயங்கள் உள்ளன. அது, சந்தேகிக்கக்கூடிய வகையில் இருக்கின்றன. எனவே ஸ்ரீமதி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என வாதாடினார்.  குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் தங்கசிவன் ஆகியோர் வாதிடும்போது, “ஸ்ரீமதியின் மரணம் தற்கொலை. அவர், தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டுதான் இறந்துபோயுள்ளார். எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதாடினார்கள். 

 

வாதத்தை இடைமறித்த நீதிபதி இளந்திரையன், “சம்பவம் நடந்தவுடனே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான் அதற்கு பொறுப்பு என்றால், அவர்களை உடனடியாக ஏன் கைது செய்யவில்லை. கலவரம் நடந்தபிறகு அவர்களை நீங்கள் கைது செய்திருக்கிறீர்கள். எனவே, ஐவருக்கும் ஜாமீன் வழங்குகிறேன்” என ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று ஜாமீன் வழக்கப்பட்ட அவர்களுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி பள்ளி நிர்வாகிகள் மூவரும் மதுரையில் தங்கி இருக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆசிரியர்கள் இருவரும் சேலத்தில் தங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்