'Baahubali Style Rescued Child'-painter heaped with accolades

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம் தேவனூர் பகுதியில் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கழுத்தளவு தண்ணீரில் மூன்று மாதக் குழந்தையை அன்னக்கூடையில் வைத்து இளைஞர்கள் மீட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தேவனூர் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியது. முதல் தளம் வரை தண்ணீர் சென்றதால் அந்த பகுதியில் வசித்து வந்தவர்கள் மாடியில் தஞ்சமடைந்தனர். மழை நிற்காததால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நீர் வடிய ஆரம்பித்ததால் உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முயன்றனர். அப்பொழுது அந்த பகுதியில் வசித்து வந்த தம்பதி ஒருவரின் மூன்று மாதக் குழந்தையை மாடியில் இருந்து பெயிண்டராக வேலை பார்த்து வந்த ஆறுமுகம் என்பவர் அன்னக்கூடையில் எடுத்து வைத்துக்கொண்டு 'பாகுபலி' ஸ்டைலில் தண்ணீரில் இறங்கி நடந்து வந்து காப்பாற்றினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தையை மீட்டு இளைஞர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.