Bacterial infection at dental clinic; Shocking incident in which eight lives were lost

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இயங்கி வந்த ஒரு பல் கிளினிக்கில் தவறான மருந்தை உபயோகித்தால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் 'அறிவு பல் மருத்துவமனை' என்ற சிறிய கிளினிக் செயல்பட்டு வந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த பலரும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தனர்.கடந்த 2023 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட பல் கிளினிக்கில் மருத்துவம் எடுத்துக் கொண்ட எட்டு பேர் ஆறு மாத காலத்திற்குள் அடுத்தடுத்து உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தன்னுடைய தாயை இழந்த இளைஞர் ஒருவர் பல் மருத்துவரின் மேல் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. வேலூர் சிஎம்சி மற்றும் இந்திய மருத்துவ வளர்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட தேசிய தொற்று நோயியல் நிறுவனம், தமிழ்நாடு பொதுசுகாதார இயக்குனரகம் ஆகியவற்றைச் சேர்ந்த வல்லுநர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பந்தப்பட்ட பல் மருத்துவமனையில் தூய்மையான கருவிகள் பயன்படுத்தப்படாமல் இருந்ததால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு எட்டு பேர் உயிரிழந்தது தெரியவந்தது. பல் திசுக்களை தூக்க பயன்படுத்தப்படும் ஒரு கருவியை மருந்து பாட்டில்களை திறக்க பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனால் சம்பந்தப்பட்ட எட்டு பேருக்கும் நியூரோமெலியோய்டோசிஸ் என்ற நோய் பரவி எட்டு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தது தெரியவந்தது. இதற்கு காரணமான மருத்துவர் அறிவசரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.