Advertisment

இயற்கைத் துறைமுகங்களை உருவாக்கும் உப்பங்கழிகள்- மரபு நடை நிகழ்வில் தகவல்

nn

Advertisment

ராமநாதபுரம் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 09.02.2023 முதல் 19.02.2023 வரை 5-வது புத்தகத் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியம், வரலாறு, சுற்றுலா சிறப்புமிக்க இடங்கள் பற்றிய விழிப்புணர்வை கல்லூரி மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்தும் பொருட்டு தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, காரங்காடு ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் மரபு நடை நிகழ்வு மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ் உத்தரவின்பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா ஆகியோர் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இதை ஒருங்கிணைத்து நடத்திய ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு பேசியதாவது, “கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஓடை, ஆறுகள் கடலில் கலக்கும் கழிமுகப்பகுதி உப்பங்கழிகளால் பல இயற்கைத் துறைமுகங்கள் உருவாகியுள்ளன. முற்காலத்தில் கப்பல்களில் இருந்து சரக்குகளை படகுகளில் ஏற்றி வந்து கரையில் இறக்குவதற்கு உப்பங்கழிகள் உதவியாக இருந்துள்ளன. சங்க இலக்கியங்கள் வருணிக்கும் கடற்கரைச்சோலை, துறைமுகத்தின் சூழலை அறிந்துகொள்ள காரங்காடு, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி உதவுகிறது. இவை ஆங்கிலேயர் காலம் வரை துறைமுகமாக இருந்தன.

தேவிபட்டினம், திருப்பாலைக்குடி செவ்விருக்கை நாட்டுப் பகுதியில் இருந்தன. இரு கோயில்களிலும் கருவறை விமானத்தின் பிரஸ்தரம் வரை கருங்கற்கள் மற்றும் மணற்பாறைகளைக் கொண்டும், மேல்பகுதி செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இவை சிறிய கோயில்களாக இருந்தாலும் கட்டடக்கலை, சிற்பக்கலை சிறப்பு கொண்டவை.

Advertisment

இங்குள்ள சிவன் கோயில்களின் அமைப்பு கொண்டு இவை கி.பி.11ஆம் நூற்றாண்டில் சோழர்காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் சோழர்கள் ஆதிக்கம் செலுத்தியதன் தடயங்கள் அதிகமாக காணப்படுகின்றன. திருப்பாலைக்குடி கோயிலில் சதுரமாக தொடங்கும் விமானத்தின் கீழ்ப்பகுதி மேலே செல்லச் செல்ல வட்டமாகக் குறுகி உள்ளது. இது தஞ்சை பெரிய கோவில் விமானம் போன்று சிறியதாக அமைக்கப்பட்டுள்ளது.

nn

தேவிபட்டினம் முதலாம் ராஜராஜ சோழனின் பட்டத்தரசி உலகமாதேவியின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சிரிளங்கோமங்கலமான உலகமாதேவிப்பட்டினம் எனவும், முதலாம் சடையவர்மன் சீவிக்கிரமபாண்டியன் காலத்தில் சிறுகடற்கரைச் சேதுமூலம் போக்கீஸ்வரம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் நானாதேசி எனும் வணிகக்குழு குறிப்பிடப்படுகிறது. தேவிபட்டினம் ஆரம்பத்தில் பிரம்மதேய ஊராக இருந்து, பின்னர் துறைமுகப் பட்டினமாக மாற்றப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் வெங்கடாசலபதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, கல்லூரி பேராசிரியர்கள் இளவரசன், பெர்லின் ஆகியோர் செய்திருந்தனர். இதில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரி, கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரி மாணவ மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டனர்.

Ramanathapuram history
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe