ADVERTISEMENT

ஏன் ஸ்டெர்லைட் விற்கப்படுகிறது? பின்னணி என்ன?

03:04 PM Jun 27, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நாளிதழ் ஒன்றில் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு வருவதாக ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. இதனுடன் இணைந்த கீழ்க்கண்ட யூனிட்களுடன் தனது காப்பர் தொழிற்சாலையை விற்பனை செய்ய எக்ஸ்பிரஷன் ஆஃப் இண்ட்ரஸ்ட்களை (ஆர்வ வெளிப்பாடுகள்) வரவேற்கிறது. ஆர்வமுள்ள பொருளாதார திறன்கொண்ட தரப்பினர் நிறுவனத்தின் புரொஃபைல் மற்றும் சம்பந்தப்பட்ட வேறு விபரங்களுடன் 2022 ஜூலை 4ம் தேதி 18.00 மணிக்குள்ளாக மின்னஞ்சல் முகவரியில் ஈ.ஓ.ஐ. சமர்ப்பிக்கலாம்.

விற்பனை யூனிட்களின் விபரம் 1. ஸ்மெல்டர் காம்ப்ளைகள் (முதன்மை மற்றும் இரண்டாம் நிலை) 2. சல்பரிக் ஆசிட் தொழிற்சாலைகள் 3. காப்பர் ரிஃபைனரி 4. தொடர்ச்சியான காப்பர் ராட்பிளான்ட் உள்ளிட்ட 10 வகையான இனங்களைக் கொண்ட ஸ்டெர்லைட் விற்பனைக்கு வருகிறது என ஆலையின் சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரம் சூட்டைக் கிளப்பியதுடன் பல்வேறு விவாதங்களை மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் மக்கள் எதிர்ப்பாளர்களின் மத்தியில் நெருப்பாய்க் கிளம்பியுள்ளது.

தவிர விளம்பரம் பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் நகரைத் திணறடித்திருக்கிறது. இந்த விளம்பரம் ஸ்டெர்லைட்டின் மேஜிக்குகளில் ஒன்று. மக்களைத் திசை திருப்பவும் குழப்பத்தில் தள்ளுவதற்கான உள்நோக்கம் கொண்டது. வழக்கமான டிராமா என பலர் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனாலும் பலர் இதனை சீரியஸாக எடுத்துக் கொண்டு ஸ்டெர்லைட்டின் நிஜமுகத்தைத் தோலுரிக்கின்றனர். பலநூறு கோடி மதிப்புகளைக் கொண்ட ஒரு ஆலை உண்மையில் விற்பனைக்கு வருகிறது என்றால் பொருளாதார திறன் கொண்டவர்கள் வழக்கமாகப் படிக்கிற பிசினஸ் தொடர்பான பத்திரிக்கை உள்நாடு வெளிநாட்டின் முன்னணி பத்திரிக்கைகள் உள்ளிட்ட அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட வேண்டும். ஆனால், ஆலை அப்படிச் செய்யாமல் சராசரி மற்றும் விளிம்பு நிலை மக்கள் படிக்கின்ற ஒரே ஒரு நாளிதழில் மட்டுமே வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் எப்படி உண்மையிலேயே வாங்கும் திறன் கொண்டவர்களைச் சென்றடையும். விளம்பரமே உள்நோக்கம் கொண்டது.

இதில், ஆலை தரப்பில், பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய கதைதான் நடக்கிறது. இப்படி விளம்பரம் வெளியிட்டு தங்களுக்கான ஆதரவையும் அனுதாபத்தையும் வழக்கமான பாணியில் மக்கள் மத்தியில் கிளப்பி விட முயற்சி செய்கிறது ஸ்டெர்லைட். மிகப் பெரிய எண்ணிக்கையில் அடித்தட்டு மக்களின் வேலைவாய்ப்புக்குக் காரணமான ஆலை விற்கப்படக் கூடாது. தடுத்து நிறுத்தப்பட வேண்டும். விற்பனை செய்யும் முடிவை வாபஸ் பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆலையின் பக்கமுள்ள பண்டாரம்பட்டி, குமரெட்டியாபுரம் கிராமத்தின் ஸ்டெர்லைட் ஆதரவு மக்கள் தூண்டப்பட்டு, தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருக்கிற திட்டத்துடன் கூடியிருக்கிறார்கள். இதனையறிந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அவர்களை மறிக்க, சட்ட ஒழுங்கு விவகாரமான நேரத்தில் தகவல் போய் ஸ்பாட்டிற்கு வந்த போலீஸ் பார்ட்டி உண்ணாவிரதக் கோஷ்டியை அப்புறப்படுத்தியிருக்கிறது. பலர் ஆலைக்கு ஆதரவாக பேட்டிகளும் கொடுக்க வைக்கப்பட்டனர்.


‘ஐயோ, வேலைவாய்ப்பு நிறுவனம் போகிறதே. இது கூடாது..’ என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் வழக்கமான சூழ்ச்சிப்பாணியில் உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட் என்கிறார்கள்.


ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் நிலுவையிலிருக்கும் போது ஆலையை விற்க முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது. எந்த வழியிலாவது, எப்படிப்பட்ட அவதாரத்திலாவது ஆலையைத் திறந்துவிட வேண்டும் என்பதே ஸ்டெர்லைட்டின் அழுத்தமான எண்ணம். ஆலை விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. மாசுவை ஏற்படுத்தியுள்ளது. காப்பர் கழிவுகளை அகற்றுவதிலும் ஒளிவுமறை என்பதற்காக 2013ன் போது உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு வந்தது. அதுசமயம் அதிகாரிகள் உட்பட பலர் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பைத் தவறாகப் புரிந்து கொண்டனர். உச்ச நீதிமன்றமே திறக்கலாம் என்று அனுமதி கொடுத்துவிட்டது என்றனர். ஸ்டெர்லைட்டும் இந்த அபராத பாயிண்ட்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.


அதன்பிறகே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் சட்ட நிபுணர்கள், தீர்ப்பின் தன்மையை அரசுக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். சொல்லப்போனால் நீதிமன்றம் அரசுக்கும், ஸ்டெர்லைட்டிற்கும் தலா ஒரு சான்ஸ் கொடுத்திருக்கிறது. அதன்பிறகே நாங்கள் இனிமேல் விதிமீறல் பண்ண மாட்டோம். ஆலையைத் திறக்கிறோம். அதனைக் கண்காணிக்க மானிட்டரி கமிட்டி ஒன்று அமையுங்கள். அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்படுகிறோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று ஆலை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணம் செய்த பின்பு உத்தரவைப் பெற்று அப்போது ஆலையைத் திறந்தது.


தற்போது ஸ்டெர்லைட்டின் எண்ணம் என்னவெனில், ஸ்டெர்லைட்டால் ஆலையைத் திறக்க கஜகர்ணம் போட்டும் முடியவில்லை. அதனால் நாங்கள் ஆலையை நடத்தவில்லை. எனவே ஆலையை விற்கிறேன் என்றும் சொல்லலாம். ஆனால் வாங்குபவரும், விற்பவரும் வெளியில் தங்களுக்குள் அக்ரீமெண்ட் போட்டுக் கொள்ளலாம்.


அவர்தான் விதிமீறலில் ஈடுபட்டார். அவர் செய்த தவறை நான் செய்ய மாட்டேன். நேரிடையாக ஐந்தாயிரமும், மறைமுகமாக 25 ஆயிரம் பேர்களுக்கான மிகப் பெரிய வேலைவாய்ப்பைக் கொண்டது. நான் விதிப்படி செயல்படுகிறேன் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று ஆலையை வாங்குபவர் நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யலாம். அதன்மூலம் ஆலையைத் திறக்க வாய்ப்பு ஏற்படலாம். இந்த வழியில் தனது உறவினரையோ பினாமியையோ கொண்டு வந்து ஆலையைக் கைமாற்றலாம். இது ஒருவகையான வழி என்றால், அடுத்த ரூட் ஸ்டெர்லைட்டின் மறைமுக வழி. உலகின் பலப்பகுதிகளில் காப்பர், சுரங்கத் தொழிலைக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் மொரிசியஸ் உள்ளிட்ட வெளிநாட்டில் பினாமியாக ஒரு கம்பனியை உருவாக்கி அதில் தனது சகோதரர்களையோ உறவினர்களையோ பினாமி பார்ட்னராக்கி அவர்களின் மூலமாக ஸ்டெர்லைட்டை வாங்கவைத்து ஆலையைத் திறக்கலாம். பின்னணியில் ஆதிக்கம் செலுத்தலாம். அதற்கும் வாய்ப்பிருக்கிறது. அத்தனை தொலைவு கூடப் போக வேண்டியதில்லை. அதானிக்குக் கூட ஆலையைத் தர முயற்சிக்கலாம். வாய்ப்பிருக்கிறது என்றும் குறிப்பிடுகின்றனர்.


யூகங்களும், ஆலையின் பின்னணி பிளான் பற்றியவைகளும் நகரில் தற்போது கனமாகவே றெக்கை கட்டுகின்றன. இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரான ஹரிராகவன், “இவர்கள் பைபாஸ் வழியிலாவது ஆலையைத் திறந்திட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். அத்தனை சுலபமாக ஆலையை இவர்கள் விற்கமுடியாது. ஆரம்பத்தில் ஆலையைத் திறக்கும்போது அதற்கு அரசு சப்சிடி சில வகைகளுக்கு மானியம் கொடுத்ததுடன் ஆலைக்கு 136 ஏக்கர் நிலத்தையும் கொடுத்தது. உண்மை நிலவரம் இப்படி இருக்க, அரசால் கற்பனைக்கும் எட்டாத சலுகை மற்றும் நிலங்களைப் பெற்ற ஆலை, தாங்கள் ஆலையை விற்கப்போவது பற்றி அரசுக்கு முறையாகத் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் அரசுக்கு இதுபற்றித் தெரிவிக்கவே இல்லை. உயர்நீதிமன்ற நீதியரசர்களான சிவஞானம், பவானி சுப்பாராயன் அமர்வு, ஆலையைத் திறக்கக் கூடாது என்ற அரசின் ஆணை செல்லும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். மேலும் இவர்கள் விதிமீறலாக மாசுவை ஏற்படுத்தி சுற்றுப்புறத்திற்கு கேடு விளைவித்தது, காப்பர் கழிவுகளை அகற்றியதிலும் ஒளிவுமறை. எனவே அதற்காக ஆலைமீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர்கள் ஆலையை விற்றுவிட்டுப் போய்விட்டால், யார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது என்ற கேள்வி நிச்சயமாக எழும்.


உலகின் பல இடங்களில் நிலக்கரி சுரங்கம் மற்றும் காப்பர் நிறுவனங்களைக் கொண்ட ஸ்டெர்லைட் ஜாம்பியா தொழிற்சாலையில் பொல்யூசனை ஏற்படுத்தியதற்காக லண்டன் நீதிமன்றம் ஒரு கனமான தொகையை நஷ்ட ஈடாக அளிக்கும்படியான உத்தரவிட்டிருக்கிறது. என்ற பேச்சும் உண்டு” என்று நக்கீரனிடம் தெரிவித்தார் சட்ட ஆலோசகரான ஹரிராகவன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT