Back-lifting plastic; Lock up manufacturing companies that break the rules!

தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளின் பயன்பாடு மீண்டும் தலைதூக்கியுள்ளது. அரசு விதிகளை மீறி பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உடனடியாக பூட்டி 'சீல்' வைக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதையடுத்து, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருள்களைப்பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தடுக்க கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. என்றாலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அண்மைக் காலமாக மீண்டும் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, சேலம் சின்னக்கடை வீதியில் பிளாஸ்டிக் பைகளை பதுக்கி விற்பனை செய்து வந்த மொத்த விற்பனையாளர் ஒருவருக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர். அந்தக் கடையில் இருந்து 500 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அதிகாரிகள் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக சேலம் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் 70க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அரசால் ஏற்கனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடாது என்றும், அவ்வாறு விதிகளை மீறி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உடனடியாக பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளோம்.

அரசின் தடை உத்தரவுக்கு புறம்பாக பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ரகசியமாகவும், திடீர் ஆய்வு மூலமும் கண்காணித்து வருகிறோம். கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்தபோது உணவுப் பண்டங்களைப் பார்சல் கட்டும் சாக்கில், மெல்ல மெல்ல பிளாஸ்டிக் பைகள் மீண்டும் சந்தையில் ஊடுருவின. இப்போது பழையபடி தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் சகஜமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சட்ட விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கண்டிப்பாக பூட்டி சீல் வைக்கப்படும். பிளாஸ்டிக், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்பதை உற்பத்தியாளர்கள், கடைக்காரர்கள், பொதுமக்கள் உணர வேண்டும். கடைகளுக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்வதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றனர்.