baby into a well for extramarital affair

கோவை மாவட்டம் நெகமம் பகுதி அருகே உள்ள கிணற்றில் பிறந்து 3 நாட்கள் ஆன பெண் குழந்தையின் உடல் ஒன்று சடலமாக இருந்துள்ளது தெரியவந்தது. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் பொள்ளாச்சி காவல்துறையினருக்குதகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிரேத பரிசோதனையின் அறிக்கையில் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது.

Advertisment

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்துவிசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் தாய் அதே பகுதியைச் சேர்ந்த மாதவி (26, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பது தெரியவந்தது. மாதவி பி.எஸ்.சி பட்டதாரி ஆவார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி கணவரை பிரிந்து தனது தந்தையின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, மாதவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுடைய பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனால், மாதவி கருவுற்றிருந்தார்.

Advertisment

இந்த நிலையில், தனது மகள் மாதவி கர்ப்பமாக இருப்பது தாய் புவனேஸ்வரிக்கு (49) தெரிய வந்தது. இதையடுத்து, அவர் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்து கருவை கலைக்க கேட்டுள்ளார். ஆனால், மாதவியை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை வளர்ச்சி அடைந்துவிட்டதாகவும் கருவை கலைக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மாதவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு வீட்டில் வைத்து புவனேஸ்வரியும், அவரது சகோதரி அம்மணி என்பவரும் பிரசவம் பார்த்துள்ளார்கள்.

இதில் மாதவிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன் பின்னர், புவனேஸ்வரியும் அம்மணியும் சேர்ந்து குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை கொன்ற இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களைகைது செய்தனர். பிறந்து 3 நாட்கள் ஆன குழந்தையை கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.