Baby passes away after eating chicken

நடந்தது சோகம் என்றாலும், குந்தைகளின் பெற்றோர்களை உஷார்படுத்தியிருக்கிறது இச்சம்பவம். நெல்லையிலுள்ள தச்சநல்லூரைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் 4 வயதேயான சாய் வைஷ்ணவி. இந்தக் குழந்தைக்கு ஆசையாகப் பெற்றோர் நேற்று முன்தினம் (27.02.2021) இரவு சிக்கன் கொடுத்திருக்கின்றனர். சிக்கன் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறாள்.

Advertisment

பதறிப்போன பெற்றோர், குழந்தையைப் பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால், அந்தக் குழந்தை அங்கு பரிதாபமாக இறந்தது. தச்சநல்லூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துகின்றனர். சிக்கன் சாப்பிட்ட சிறு நேரத்திற்குள் குழந்தையின் மரணம் ஏற்பட்டது பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவரிடம் நாம் கேட்டபோது,பெயர் வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட மருத்துவர், “பொதுவாக சிறு குழந்தைகளின் மூச்சுக்குழல், நாம் குளிர்பானம் அருந்த உபயோகப்படுத்துகிற ஸ்ட்ரா சைஸ் அளவிலான விட்டம் கொண்டதாக இருக்கும். குழந்தை சாப்பிட்ட சிக்கன் அந்த மூச்சுக்குழாயை அடைத்திருக்க வாய்ப்பு இருகிறது. அது சமயம் குழந்தையின்மூளைக்குச் செல்லும் ரத்தமும், நுரையீரலிலிருந்து செல்கிற பிராண வாயுக்காற்றும் அடைபட்டுவிடும். மூன்றிலிருந்து ஐந்து நிமிடத்திற்குள்ளாக மூளைக்குத் தேவையான பிராண வாயுவும், ரத்தமும் கிடைக்காவிட்டால் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு மூச்சுத் தினறலாகி மயங்கி உயிருக்கே மோசமாகிவிடும் வாய்ப்பு உண்டு.

Advertisment

எனவே குழந்தைகள் உணவு சாப்பிடும்போது பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். அவர்கள் நடந்துகொண்டோ அல்லது ஒடிக்கொண்டிருக்கும்போதோ உணவு தரக் கூடாது. குழந்தைகளுக்குப்பல் முளைத்து 5 வயதுக்கு மேல் ஆனவுடன், அவர்களுக்குச் சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களை நன்றாக மென்று சாப்பிட வைக்க வேண்டும். அப்படியே விழுங்கினால் செரிமானக் கோளாறு பிரச்சினையாகிவிடும். சாப்பிடும்போது இருமல் ஏற்பட்டால் தொடர்ந்து அவர்களுக்கு உணவு தரக் கூடாது. குடிக்கத் தண்ணீர் கொடுக்க வேண்டும். மொத்தத்தில் பல் முளைத்து 6 வயது தாண்டும் வரை குழந்தைகளின் உணவில் கவனமாகவும், அவர்கள் சாப்பிடும்போது பெற்றோர் உடனிருந்து கவனமாகப் பார்க்க வேண்டும்” என்றார் மருத்துவர்.

அம்மாக்களுக்குகுழந்தைகளின் உணவு விஷயத்தில் கவனம் தேவை.