/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1409.jpg)
தென்காசி மாவட்டம் புளியரைப் பகுதியின் தமிழக - கேரள எல்லையான அச்சன்கோவில் மலைப் பகுதி கேரளாவைச் சேர்ந்தது. அங்கிருந்து வனத்தின் ஊடே புனலூர் செல்கிற அமலிமுக்கு சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணியளவில் களரி வளையம் அருகே ஒன்றரை வயது மதிக்கத்தக்க யானைக் குட்டி ஒன்று இறந்து கிடந்தது. அவ்வழியாக சென்றவர்கள் மண்ணப்பாறை வனத்துறை சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
வனச்சரக அலுவலர் அனில் குமார் தலையிலான வனக்காவலர்கள் சம்பவ இடம் வந்தபோது, இறந்து கிடந்த குட்டி யானையைச் சுற்றி யானைக் கூட்டம் நின்று கொண்டு யாரும் அருகில் செல்ல முடியாதபடி முற்றுகையிட்டிருந்தன. யானைக் கூட்டத்தைக் கலைக்க முடியாமல் வனத்துறையினர் திணறினர். சுமார் 4 மணி நேரத்திற்குப் பின்னர் இறந்த குட்டி யானையை சுற்றி நின்ற யானைக் கூட்டம் கலைந்து சென்றன. ஆனால் தாய் யானை மட்டும் தன் குட்டியை விட்டு நகராமல் கண்ணீருடன் தலையை ஆட்டிக் கொண்டு நின்றிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2-2_86.jpg)
வெகு நேரப் போராட்டத்திற்குப் பிறகு காத்திருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து தாய் யானையை விரட்டினர். ஆனாலும் தாய் யானை சிறிது தூரம் ஓடிச் சென்று பின் அங்கிருந்தபடியே குட்டியைப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டே நின்றிருந்தது. தாய் யானையை அருகே வர விடாமல் வனத்துறையினர் கண்காணித்துக் கொண்டிருக்க சம்பவ இடத்திற்குவந்த கால்நடை உதவி அலுவலர் சியாம் சந்திரனின் தலைமையிலான வனக் காவலர்கள் குட்டி யானையின் உடலை பிரேதப் பரிசோதனை நடத்தினர். இதன்மூலம் குட்டி யானை உட்கொண்ட உணவு ஜீரணிக்க முடியாமல் வயிற்றுப் போக்கு மற்றும் மாரடைப்பு காரணமாக குட்டி யானை இறந்திருப்பதுதெரியவந்தது.
இறந்த குட்டி யானையால் வனப் பகுதியின் மற்ற யானைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சம்பவ இடத்திலேயே குட்டி யானையின் உடல் தீ வைத்து எரியூட்டப்பட்டது. இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த தாய் யானை தன் குட்டிக்கு கண்ணீருடன் விடை கொடுத்த உணர்ச்சியான சம்பவம் வனத்துறையினரையும் உருக வைத்துவிட்டது. ஐந்தறிவு வனவிலங்கு என்றாலும் ரத்த பாசம் என்று வருகிற போது இயல்பாகவே கண் கலங்குகிற மனிதாபிமானமும் வந்து விடுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)