Babji Madan, imprisoned under the Goondas Act; High Court orders Tamil Nadu government to respond ..!

தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பப்ஜி மதன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்கசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisment

இந்த வழக்கில் ஜூன் 18ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர், ஜூலை 5ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் குமார் என்கிற மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தனது செயல்பாடுகளால் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்குக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பப்ஜி விளையாடுவது ஒருபோதும் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் செயல் எனக் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

அதிகாரிகள், மனதைச் செலுத்தாமல் தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தான் விளையாடியது இந்திய அரசால் தடை செய்யப்படாத கொரிய பப்ஜி விளையாட்டு எனவும் கூறியுள்ளார். தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர்.என். மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை மாநகரக் காவல் ஆணையரும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.