/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/iru.jpg)
சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட தளபதி நகர், எம் ஜி ஆர் நகர், சிசில் நகர், கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருளர் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் உள்ளவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயின்ற 35-க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின சமுதாய மாணவர்கள் பள்ளியில் கல்வியை தொடராமல் இடையில் நின்றுள்ளனர்.
இதனை அறிந்த கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா முத்துக்குமார் உள்ளிட்ட கிராம முக்கிய நிர்வாகிகள் இணைந்து பள்ளியில் இடை நின்ற இருளர் சமூக மாணவர்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று அடையாளம் கண்டு மீண்டும் பள்ளியில் படிக்க வைப்பதற்கான பள்ளியில் இடைநின்ற இருளர் மாணவர்களின் இல்லங்களைத்தேடி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
அதில், இடை நின்ற மாணவர்ககளின் வீடுகளுக்கு சென்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை ஏற்ற பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களான இலவச பஸ் பாஸ், இலவச கல்வி, மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், தமிழ் வழியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்தால் மாதம் ரூ 1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம், உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கி கூறி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான உடை, பாடப் புத்தகம் உள்ளிட்ட அனைத்து வகையான உதவிகளையும் செய்து மீண்டும் அவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் கூறுகையில், ‘பேரூராட்சியில் இருந்து பள்ளிக்கு போகாத மாணவர்களை தேடி வருகிறோம். மேலும் நாங்கள் இதுபோன்று செய்வதறிந்து பல மாணவர்கள் எங்கள் கண்ணில் படாமல் ஓட்டம் பிடித்துள்ளனர். அவர்களையும் தேடி வருகிறோம். ஒரு காலத்தில் பாம்பு பிடிப்பதும், எலி பிடிப்பதுமே தொழிலாக இருந்து தற்போது மீன்பிடி தொழில் செய்து வரும் இவர்கள் கல்வி அறிவு குறித்து புரிதல் இல்லாமல் உள்ளனர். அவர்களின் பள்ளிப் படிப்பை தொடர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்’ என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)