
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10/01/2022) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக இரு குழுக்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இரு குழுக்களிடையே சமரசம் ஏற்படவில்லை. இதனால் ஆலோசனைக் கூட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மதுரை மாவட்ட ஆட்சியர், "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த உள்ளது" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேட்டியளித்த ஐ.ஜி.அன்பு, "அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டைக் காண அந்தந்த கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள கிராம மக்கள், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தவர்களுக்கு அனுமதி இல்லை" என்றார்.
அதன் தொடர்ச்சியாகப் பேசிய வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, "அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு நேரடியாக டோக்கன் வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்க நாளை (11/01/2022) முதல் ஆன்லைன் அல்லது இ- சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யலாம்.
ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீரர்களோ, காளைகளோ ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டு காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும். அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் அரசு சார்பில் காலை, மதிய உணவு வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை 07.00 மணிக்கு தொடங்கப்படும்" எனத் தெரிவித்தார்.