/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/69_160.jpg)
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வரும் 19 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. மேலும் விழாவிற்கு வருகை தரும் முதல்வர் சாலையில் இருபுறமும் நிற்கும் மக்களை சந்திக்கவுள்ளார். அதனால் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவணித்து வரும் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர், விழா நடக்க உள்ள இடம் மற்றும் முதல்வர் வந்து செல்லும் பாதையையும் தினந்தோறும் ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் நேற்று விழா நடக்கும் இடத்தை ஆய்வு செய்துவிட்டு தனது காரில் அலுவலகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது கார் செம்புலிவரம் என்னும் இடத்தில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக நின்றுகொண்டிருந்த போது, திடீரென பின்னால் வந்த லாரியின் டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருந்த சரக்கு லாரியின் மீது மோதியுள்ளது. அதனைத் தொடர்ந்து சரக்கு லாரி முன்னாள் இருந்த ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கரின் கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், காவல் ஆணையரின் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக ஆணையர் சங்கர் உயிர் தப்பிய நிலையில் பாதுகாப்பு காவலர் மாரி செல்வம் காயமடைந்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்தில் காயம் அடைந்த பாதுகாப்பு காவலர் மாரி செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காவல் ஆணையரை வேறொரு காரில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு விபத்துக்குள்ளான வாகனங்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து விபத்து தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்க உள்ள விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய செய்துவிட்டு சென்ற காவல் ஆணையரின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)