Auwaiyar Award Notification for 2024

2024 ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெண்களுக்காகக்கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகத்தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஔவையார் விருதுவழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8 ஆம் தேதி) இந்த விருது வழங்கப்படும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் இவ்விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை இலக்கியத்தின் மூலமாகத்தலித் மக்களின் குரலாக ஒலித்து சமூகத்தொண்டாற்றி வரும் முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.