Advertisment

மாயமான பள்ளி மாணவி; மீட்ட ஆட்டோ ஓட்டுநர்

 school girl missing  Rescued auto driver!

Advertisment

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மகள், செந்துறை ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் காலை பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்றவர், புத்தகப் பையை பள்ளியில் வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். பள்ளிக்கு வந்த மாணவி மாயமான தகவல் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட காவல்துறை முழுவதையும் முடுக்கிவிட்டார். மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் செக்போஸ்ட்களிலும் தீவிரமாக சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி மாணவியை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அந்த மாணவி செந்துறை பஸ் நிலையம் அருகே நிற்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு போலீசார் தேடிச் சென்றனர்.

அதற்குள் தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் மாணவியை பத்திரமாக ஆட்டோவில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மாணவியிடம் போலீசார் விசாரித்த போது பள்ளி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதால் பெற்றோர்,ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்று பயந்து கொண்டு பள்ளியில் புத்தகப் பையை விட்டு விட்டுச் சென்றதாகத்தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவிக்கு அறிவுரை கூறி பள்ளி நிர்வாகத்திற்கும் மாணவியின் பெற்றோருக்கும் உரிய ஆலோசனை கூறி பெற்றோர்களுடன் மாணவியை அனுப்பி வைத்தனர் போலீசார்.

Ariyalur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe