
சென்னை பாடி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் திருநகரைச் சேர்ந்தவர் பாக்யராஜ். டிவி மெக்கானிக்காக பணியாற்றி வரும் பாக்கியராஜ் கடந்த 15ஆம் தேதி பாடியிலிருந்து அவருடைய வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோவை பிரபாகரன் என்பவர் இயக்கினார். அப்பொழுது ஆட்டோ ஓட்டுனர் பிரபாகரன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆட்டோ சென்னை பாடி மேம்பாலத்தில் சென்று போது தடுமாறி பக்கவாட்டு தடுப்பு சுவரின் மீது மோதியது. அதில் ஆட்டோவில் அமர்ந்திருந்த மெக்கானிக் பாக்கியராஜ் தூக்கி வீசப்பட்டார். 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த பாக்கியராஜ் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் பிரபாகரன் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட பாக்கியராஜ் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் விபத்தில் உயிரிழந்த பாக்கியராஜின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் மதுபோதையில் ஆட்டோவை இயக்கிய பிரபாகரனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.