Auto driver passes away in money problem police investigation

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள வட சிருவள்ளூர் ஊரைச் சேர்ந்தவர் முனியன். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செல்வம், பழனி ஆகியோருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏற்கனவே பிரச்சனை இருந்துவந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (02.10.2021) முனியன் வீட்டுக்குச் சென்ற பழனி, செல்வம் ஆகிய இருவரும் முனியனிடம் பணம் கேட்டுள்ளனர். இதனால் முனியனுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

அப்போது அங்கிருந்த முனியன் மகன் ஆட்டோ டிரைவரான விஜயகுமார், தனது தந்தையிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்தவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழனி, அருகில் கிடந்த மரக் கட்டையை எடுத்து விஜயகுமார் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த விஜயகுமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆட்டோ டிரைவர் விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Advertisment

இதையடுத்து விஜயகுமாரின் தந்தை முனியன், சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் பழனி, செல்வம் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், விஜயகுமார் கொலை தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.