
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், திருமணம் ஆனவர். அதே பகுதியான களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் சுமன். ஆட்டோ ஓட்டுநர்களான இருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பல்லவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அறிமுகமாகி இருந்தார். பல்லவி ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவர் பண்ருட்டியில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். வேலைக்கு தினமும் ஆட்டோவில் சென்று வரும்போது பல்லவி இருவரிடமும் பழகி வந்துள்ளார். இவர்களது முறையற்ற தொடர்பால் சக்திவேலுக்கும், சுமனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு சமாதானம் பேசுவதாக கூறி சக்திவேலுவை சுமன் அழைத்து சென்றுள்ளார். சுமன் பேச்சை நம்பி சக்திவேல் சென்றார். தட்டாஞ்சாவடி காளி கோவில் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது பல்லவி விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று சுமன் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சுமனும், அவரது நண்பர்களும் சேர்ந்து சக்திவேலை கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி சபியுல்லா, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்டோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு, தப்பி ஓட முயன்ற சுமன் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட இருவரை நள்ளிரவே அதிரடியாக கைது செய்தனர். பல்லவியை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதனிடையே சக்திவேலுவை சுமனின் நண்பர்கள் நான்கு, ஐந்து பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்று கூறியும், அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சக்திவேல் உறவினர்கள் பண்ருட்டி தட்டஞ்சாவடி - சித்தூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.