தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த திங்கட்கிழமை அன்று 10 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. போலீசாரும் பல இடங்களில் தேடி வந்தனர். அடுத்த நாள் காலை மற்றொரு வீட்டின் மாடிப் பகுதியில் சிறுவன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாவட்ட எஸ்பி தலைமையில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. அதேநேரம் சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுவனின் ஆசனவாய் மற்றும் வாய் பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.
இந்த கொலையில் ஈடுபட்டவர் யார் என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தூத்துக்குடி சிறுவன் படுகொலை சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் சிறுவன் படுகொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் ஓரினச்சேர்க்கைக்கு பலவந்தமாக உட்படுத்த முயற்சி செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி போலீசாருடன் சேர்ந்து சிறுவனின் கொலைக்கு யார் காரணம் என கண்டுபிடிப்பதில் உதவுவது போல நடித்ததும், சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்தான் கொலையை செய்தது எனத்தெரிய வந்து கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.