police cctv

Advertisment

சென்னையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர் மீது ஆட்டோ மோதி சென்ற சம்பவம்தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியிலிருந்து பூந்தமல்லி செல்லக்கூடிய நந்தம்பாக்கம் சாலையில் நேற்று இரவு காவல்துறையினர் வழக்கம்போல் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோ ஒன்றை உதவி ஆய்வாளர் பொன்ராஜ் நிறுத்த முற்பட்டார். அப்பொழுது அந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக பொன்ராஜ் மீது பலமாக மோதியது. இந்த சம்பவத்தில் மோதிய ஆட்டோவில் இருந்த நபர்கள் ஆட்டோவை நிறுத்தாமல் தப்பிச் சென்றனர். இந்த விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜுக்கு கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆட்டோவில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த நபர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் அந்த சாலையின் அருகே உள்ள கடை ஒன்றிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.