Advertisment

ஓ.என்.ஜி.சி கிணறுகளை மூட அதிகாரிகள் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நல்லாண்டார்கொல்லை, கல்லிக்கொல்லை, கருவடதெரு, கருகீழத்தெரு, வனக்கன்காடு, கோட்டைக்காடு முள்ளங்குறிச்சி, கறம்பக்குடி புதுப்பட்டி ஆகிய இடங்களில் எண்ணெய் எடுப்பதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் சுமார் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் அடிகள் வரை ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பரிசோதனைகள் செய்துள்ளனர். போதிய வருவாய் கிடைக்காது என்பதால் எண்ணெய் எடுக்கும் முயற்சியைக் கைவிட்டதோடு ஆழ்குழாய் கிணறுகளில் கசிவு ஏற்படாமல் 4 இடங்களில் தரைமட்டத்திலும், நல்லாண்டார்கொல்லை, கல்லிக்கொல்லை, கருவடதெரு உள்ளிட்ட 3 இடங்களில் எந்த நேரத்திலும் இயக்கும் அளவில் வாழ்வுகள் அமைத்தும் மூடி வைத்துச் சென்றனர். அனைத்து இடங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு தற்போது வரை குத்தகை தொகையை ஓஎன்ஜிசி நிறுவனம் வழங்குவதுடன் ஆண்டுக்கு ஒரு முறை அதிகாரிகள் வந்து கசிவுகள் உள்ளதா என்று சோதனைகளும் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில்தான் கடந்த 2017 பிப்ரவரியில் மத்திய அரசு நெடுவாசல் கிராமத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட கச்சாப் பொருட்களை எடுக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறிவித்து தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்த நிலையில், நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவில் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்த நிலையில் அரசியல் கட்சியினர், திரை நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பல்வேறு சங்கங்கள் என அனைவரும் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டக் கலங்களுக்கும் வந்தனர். சுமார் 197 நாட்கள் நெடுவாசல் போராட்டம் நடந்தது. அதேபோல நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் திருவிழா போல நடந்தது.

Advertisment

போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைவதைப் பார்த்து மத்திய, மாநில அமைச்சர்கள் நெடுவாசல் திட்டம் வராது என்று உறுதி அளித்ததோடு 7 எண்ணெய் கிணறுகளையும் மூடி விவசாயிகளிடம் ஒப்படைப்பதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் கணேஷ் போராட்டக்குழுவிடம் தனித்தனியாக எழுதிக் கொடுத்தார்.

இந்நிலையில் வானக்கன்காடு கிராமத்தில் உள்ள எண்ணெய் கிணற்றில் கசிவு ஏற்பட்டு தீ பற்றியதால் கடந்த 2017 அக்டோபர் 6 ந் தேதி வந்த ஓஎன்ஜிசி அதிகாரிகள் வெளியிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து அந்த கிணற்றில் கொட்டி தற்காலிகமாக மூடிச் சென்றனர்.

அதன் பிறகு விவசாயிகளும் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளைப் பாதுகாப்பாக மூட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த வருடம் கடந்த 2 ந் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்திலும் நெடுவாசல் கிராமத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிலையில் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு (6.10.2017) முன்பு தற்காலிகமாக மூடப்பட்ட வானக்கன்காடு ஓஎன்ஜிசி கிணறு உள்ள இடத்திற்கு இன்று ஆகஸ்ட் 5 ந் தேதி வடகாடு போலீசாரின் பாதுகாப்போடு காரைக்காலிலிருந்து ஒஎன்ஜிசி பொது மேலாளர் (ஆழ்குழாய்) சந்தானகுமார், பொறியாளர்கள் அழகுமணவாளன், ராதாகிருஷ்ணன், மண்ணியல் அருண்குமார், மற்றும் தாசில்தார் சந்திரசேகர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து குத்தகை நிலத்தை அளவீடு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது.. ''தரை மட்டத்திற்குக் கீழே உள்ள 4 ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகள் பயனற்று உள்ளதால் மூடுவதற்கான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வு அறிக்கையை சில தினங்களில் கொடுத்த பிறகு தொடர் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்றனர். பல வருடமாக எண்ணெய் கிணறுகளை மூட கோரிக்கை வைத்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் வாழ்வு அமைக்கப்பட்டுள்ள கிணறுகளையும் பாதுகாப்பாக மூடி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

ongc puthukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe