Advertisment

அதிகாரத்திற்கு அந்திமக் காலம்  நெருங்குகிறது !- ஆசிரியர் நக்கீரன் கோபால் கைதுக்கு எஸ்.எஸ். சிவசங்கர் கண்டனம்...

ss . sivashankar

அந்திமக் காலம் நெருங்கும் போது, யாரை கண்டாலும் பயம் வரும், யாரைக் கண்டாலும் கோபம் வரும்.

Advertisment

1975 ஆம் ஆண்டு, இந்திரா காந்தி பிரதமர். உச்சபட்ச அதிகாரத்தோடு ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். எல்லோரையும் துச்சமாக நினைத்தார். அவருக்கு ஓர் முற்றுப்புள்ளி, நீதிமன்றத்தின் மூலம் வந்தது. அதுவரை தைரியத்தின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருந்தவர், அதலபாதாளத்தில் வீழ்ந்தார். பயப் பள்ளத்தாக்கில் கிடந்தார்.

Advertisment

தன் எதிர்காலத்தை நினைத்து பயந்தார். அதை தேசத்தின் பாதுகாப்பிற்கு சிக்கல் என்றார். அவசர நிலை பிரகடனம் செய்தார். பத்திரிக்கைகளுக்கு தணிக்கை என்ற பெயரில் வாய்ப் பூட்டு போட்டார். எதிர்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறையில் சொல்ல அளவில்லாத வகையில் கொடுமைகள் நிகழ்ந்தன.

அவசர நிலைக்கும் ஒரு முடிவு வந்தது. தேர்தலும் வந்தது. அதுவரை வாய் மூடி இருந்த மக்கள் கை திறந்தார்கள். வாக்கு சீட்டில் ஓங்கி, ஓங்கிக் குத்தினார்கள். அது காங்கிரஸ் கட்சியின் மீது விழுந்தது. இந்தியாவை தொடர்ந்து ஆண்ட கட்சி தோற்றுப் போனது. முதல் பிரதமரின் மகள், பிரதமர் ஆவதற்கே பிறந்தவர், இரும்பு மங்கை, அண்டை நாட்டிற்கு விடுதலை பெற்று தந்தவர், உலக நாடுகள் அறிந்த தலைவர் அன்னை இந்திரா ஆட்சியை பறி கொடுத்தார்.

சர்வாதிகாரத்திற்கு மக்கள் என்றும் துணை போவதில்லை என்பதற்கு இந்திராவின் தோல்வியே சாட்சி.

1991 சட்டமன்ற தேர்தல். ராஜீவ்காந்தி மரணத்தால், அவர் ரத்தத்தால், அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. தலைவர் கலைஞர் தவிர, தி.மு.கவின் அத்தனை வேட்பாளர்களும் தோல்வி. ஜெயலலிதா முதல்வரானார். தன்னை அசைக்க முடியாத சக்தியாக கற்பனை செய்து கொண்டார். அதிகாரத்தை சுவைத்து அடிமையாகிப் போனார். எதிர் குரல்கள் கசந்தன. அய்.ஏ.எஸ் அதிகாரியானலும் எதிர்கருத்து சொன்னமைக்காக சந்திரலேகா ஆசிட் அபிஷேகம் செய்யப்பட்டார். வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ரவுடிகள் ஏவி வெட்டப்பட்டார். தராசு அலுவலகம் தரைமட்டமானது.

கேட்க ஆள் இல்லை என்று முடிவெடுத்தார். அரசு நிலத்தை முதல்வரே வாங்கினார். ஒரு ரூபாய் சம்பளம் போதும் என்றார். ஆனால், தமிழ்நாட்டையே பத்திரப் பதிவு செய்தார். 35 வயதில் ஓர் பிள்ளையை தத்தெடுத்தார். ஊர், வாய் பிளக்க ஆடம்பர திருமணம் செய்து வைத்தார். ஒட்டியாணம் பளபளக்க முதல்வரே ஊர்வலம் போனார். உடன் துப்பாக்கி காவலாக டிஜிபி வந்தார்.

மக்கள் எல்லாம் தம்மை உலகின் அரசியாக நினைத்து, வாய் பொத்தி நிற்கிறார்கள் என நினைத்தார் ஜெ. பத்திரிக்கைகள் சாமரம் வீசிய குளிரில் மகிழ்ந்திருந்தார். எதிர்த்து கருத்து சொன்ன நக்கீரனை வாட்டி வைத்தார், வழக்குகளால். 1996 தேர்தல் வந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்குள் நுழைய முடியவில்லை. அமைச்சர்கள் மீது கல் வீசப்பட்டது. கடைசியில் பர்கூர் தொகுதியில், அதிகார சிம்மாசனம் கவிழ்ந்து விழுந்தது. அரசி ஜெயலலிதாவிற்கு மக்கள் 'தோல்வி' கிரீடம் சூட்டினார்கள்.

மக்கள் சக்திக்கு முன் எல்லா அதிகாரமும் தூள் தூளாகும் என்பது மீண்டும் உறுதியானது.

அதே வழியில் இன்று எடப்பாடி பழனிசாமி அரசாங்கம், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏவுதலால் நக்கீரன் ஆசிரியர் அண்ணன் கோபால் அவர்களை கைது செய்துள்ளது. தேச துரோக வழக்கு என பூச்சாண்டி காட்டுகிறது.

நக்கீரன் பத்திரிக்கை மீது, ஜெயலலிதா தொடுத்த தாக்குதல்கள் ஏராளம். ஒவ்வொன்றையும் அண்ணன் கோபால் அனாயசமாக எதிர் கொண்டு மீண்டுள்ளார். அது அத்துமீறிய நேரடி தாக்குதலாக இருந்தாலும், காவல்துறை கொண்டு பொய்வழக்கு தாக்குதலாக இருந்தாலும்.

நக்கீரன் அலுவலகத்திற்கு மின்சாரத்தை துண்டித்து, தண்ணீரை துண்டித்து, அத்துமீறி உள்ளே நுழைந்து அதிகார துஷ்பிரயோகம் செய்த போதாக இருந்தாலும், அலுவலகத்தை செயல்பட விடாமல் முடக்கி போட்ட போதாக இருந்தாலும், கைது செய்து சிறையில் அடைத்த போதாக இருந்தாலும், அண்ணன் நக்கீரன் கோபால் அஞ்சாமல் எதிர்கொண்டவர். நக்கீரன் பணியாளர்களும் யாருக்கும் அஞ்சுவோர் இல்லை. இது அத்தனையும் ஜெயலலிதா காலத்திலேயே.

ஜெயலலிதாவிற்கே அஞ்சாமல், உண்மைகளை வெளிக் கொணர்ந்தவர், ஜெயலலிதாவின் அடிமைகளுக்கா அஞ்சப் போகிறார் ?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எதிர்த்தே மக்கள் குரலை ஒலிக்க தயங்காதவர், ஒட்டு தாடியாய் இருக்கும் ஆளுநர் அதிகாரத்திற்கா அஞ்சப் போகிறார் ?

கல்லூரிக்கு படிக்க அனுப்பிய தம் பிள்ளைகளை, கல்லூரி பேராசிரியர் ஒருவரே பாலியல் தொழிலுக்கு அழைத்தால், அதை பத்திரிக்கை தட்டிக் கேட்காதா ? அதற்கு பின்புலமானவர்களை கண்டிக்காதா?

அதை தானே "நக்கீரன்" செய்தது. அந்த ஏழை அப்பாவி மாணவிகளின் குரலை தானே, நக்கீரன் ஒலித்தது. அது தான் தேச விரோதமா?

உமக்கு உண்மையாக மானம் இருந்தால், நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தானே போட வேண்டும்? எதற்காக காவல்துறையினர் பின்னால் ஒளிந்து கொண்டு வாள் சுழற்றுவது ?

ஆளுநருக்கும், ஆட்சிக்கும் அதிகார மமதையில் எதிர் கருத்துகளை பொறுக்க முடியவில்லை. அதன் விளைவே அண்ணன் நக்கீரன் கோபால் கைது.

பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் இந்த கைது கடுமையான கண்டனத்திற்குரியது.

அதிகாரத்திற்கு அந்திமக் காலம் நெருங்குகிறது !

nakkheerangopal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe