Advertisment

ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும்கண்டனம்!!

CPIM

நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு.கோபால் அவர்களை இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,

Advertisment

அருப்புக்கோட்டை, கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் வற்புறுத்தல் செய்தது தொடர்பாக ஆடியோ கேசட் வெளிவருவதற்கு முன்னரே இத்தகைய சம்பவத்தை வெளியுலகத்திற்கு தெரிவித்தது நக்கீரன் பத்திரிகையாகும். அதன் பிறகு அது தொடர்பான வழக்கு விசாரணை சம்பந்தமாக பல்வேறு கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு முறையான விசாரணை நடைபெற வேண்டுமென நக்கீரன் பத்திரிகை எழுதி வந்தது. இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்திலிருந்து புகார் வந்த அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வழக்கு பதிவு செய்வதற்கு முன்னரே அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள், குற்றச்சாட்டுகள் எழும் போது அதை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதும், அதன் மீது முறையான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர் நாடியாகும். அதை பறிக்கும் வகையில் இன்று நக்கீரன் கோபால் கைது செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

இந்த பிரச்சனையில் ஆளுநர் பெயரும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பாரபட்சமற்ற சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறது. உயர் பொறுப்புகளில் இருப்போர் மீது இத்தகைய குற்றச்சாட்டுக்கள் வரும்போது நியாயமான விசாரணை மூலம் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் மீது இத்தகைய தாக்குதல்கள் தொடுப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும். எனவே, ஆளுநர் தமிழகத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பிரச்சனையில் உயர் பொறுப்புகளில் இருக்கிற அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் வற்புறுத்திய நிலையில் இதற்கு நேர்மாறாக, சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவி மற்றும் அவருக்கு கீழே பணியாற்றிய இரண்டு துணை பேராசிரியர்களோடு இந்த வழக்கை முடித்துவிட்டிருப்பது எண்ணற்ற கேள்விகளுக்கு இடமளித்துள்ளது. இந்நிலையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பல உண்மைகளை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதியாகும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தமிழகத்தில் எதிர்கட்சியினர் மற்றும் மக்கள் உரிமைகளுக்காக போராடுகிற பல அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, அலைக்கழிக்கப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது அன்றாட நடவடிக்கைகளாக மாறியுள்ளது. மேலும் பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய தாக்குதல்களின் மூலம் தமிழக மக்களின் உரிமை போராட்டங்களை முடக்கி விட நினைப்பது பகல் கனவாகவே முடியும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு கோபால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் தமிழக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்த்து அனைத்து கட்சிகளும், பொதுமக்களும் வலுவான கண்டன குரலெழுப்ப வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

nakkheeran gopal communist party
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe