Advertisment

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை மாற்றம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை மாற்றம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


Advertisment

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அத்திக்கடவிலிருந்து குன்னத்தூர் வரையிலான விழிப்புணர்வு பயணத்தை பா.ம.க. இளைஞரணித் தலைவரும் மருத்துவர் அன்புமணி இராமதாசும் இன்று மேற்கொண்டனர். அத்திக்கடவில் இந்த பயணத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் தெய்வசிகாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

அத்திக்கடவு - அவிநாசி செறிவூட்டுத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று ஒருநாள் விழிப்புணர்வு பிரச்சாரப்பயணத்தை இப்பகுதியில் தொடங்கியுள்ளோம். இப்பயணம் அன்னூர் மற்றும் அவிநாசி வழியாக சென்று மாலையில் பெருந்துறையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இத்திட்டம் கொங்குமக்களின் 58ஆண்டு கனவுத்திட்டமாகும்.



ஆங்கில ஆட்சிக்காலத்தில் 1834இல் சர் ஆர்தர் தாமஸ் ஹாட்டன் என்கிற பொறியாளரால் திட்டமிடப்பட்டு, அதன்பிறகு அவர் ஆந்திராவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் இத்திட்டம் கிடப்பில்போடப்பட்டது. நீண்டகால இடைவெளிக்குப்பிறகு இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான திரு. மாரப்ப கவுண்டரின் முயற்சியால் 1962இல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த திரு காமராசர் அவர்களால் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் அப்போதைய மதிப்பீடு ரூ.10கோடி அதன்பின்...

1996இல் இதன் மதிப்பீடு ரூ. 138கோடி, 2002இல் ரூ. 280கோடி, 2012இல் ரூ.1800கோடி. இன்றைய தேதியில் இத்திட்டத்தை நிறைவேற்ற உத்தேச மதிப்பீடு 3500கோடி ரூபாய் ஆகும்.

வெற்று இலவச திட்டங்களுக்கு உலகவங்கியிடம் கடன்வாங்கி பல்லாயிரம்கோடி செலவுசெய்யும் இந்த அரசு, இதுபோன்ற மக்கள்நல திட்டங்களுக்காக கடன்வாங்குவதில் தவறேயில்லை. 'ஒட்டகத்தின் முதுகு' எனப்படும் நில அமைப்புடைய இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் 2000அடியாக தற்போது அதளபாதாளத்தில் உள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் 100 (அ)200 அடியாக குறைய வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமின்றி இதன்மூலம் 1.5இலட்சம் ஏக்கர் நிலம் பாசனவசதிபெறும்.
50இலட்சம் மக்களின் குடிநீர்தேவை நிறைவேறும்.

இத்திட்டம் மூலம் அத்திக்கடவு - பில்லூர் அணை வழியாக அன்னூர் வாய்க்கால் வரை 51கிமீ.
அன்னூர் - அவிநாசி 21 கிமீ அவிநாசி - பெருந்துறை 60கிமீ தூரத்திற்கு பாசனவசதி கிடைக்கப்பெறும்.

இவ்வழியில் 31 பொ.ப.துறை ஏரிகள், 40 ஊ.மன்ற குளங்கள், 630 நீர்நிலைகள் ஆக மொத்தம் 701நீர் தேக்கும் நிலைகள் பயனுறும். தேர்தலுக்கு முன்பு இப்பகுதி கொங்கு இளைஞர்களின் போராட்டத்தின் விளைவாக 2016இல் இத்திட்டம் நிறைவேற்றப்படுமென்று அப்போதைய தமிழக முதல்வர் செல்வி செயலலிதா அறிவித்தார்.

ஆனால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகமிக குறைவானதே. இத்திட்டம் உபரிநீர்திட்டம் என்பதால் கீழ்பகுதி மக்கள் யாருக்கும் இத்திட்டத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. 1959 முதல் 1996வரையிலான காலகட்டத்தில் 41 ஆண்டுகளில் இந்த அணை 27முறை நிரம்பியுள்ளது.

சராசரியாக ஆண்டுக்கு 19-25 டிஎம்சி தண்ணீர் காவேரி வழியாக வீணாக கடலில் கலந்து வீணாகிவிட்டது. இப்போதுவரும் செய்திகளின்படி இத்திட்டத்தின் பெயர் காலிங்கராயர் காரமடை எனப்பெயர்மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் எங்கள் நோக்கம் காமராசர் காலத்தில் திட்டமிட்டபடியே இத்திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதேயாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe