தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய வட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தீவுப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று( 22.11.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் உத்தரவிட்டுள்ளார். கனமழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருப்பதால் விடுமுறை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.