
வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒன்றாக பரங்கிப்பேட்டை திகழ்ந்து வருகிறது. இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு தான் நிறுவப்பட்டிருந்தது. இந்த இரும்புத் தொழிற்சாலைக்கு தேவையான இரும்புத்தாதை சேலத்தில் இருந்து வெள்ளாற்றில் படகு மூலமாக கொண்டுவரப்பட்டு 1835-ஆம் ஆண்டுவரை இரும்புத் தொழிற்சாலை இங்கு இயங்கிவந்தது. தொழிற்சாலை நடத்துவதில் ஏற்பட்ட நஷ்டத்தால் அப்போதைய பிரிட்டன் அரசு மூடிவிட்டது.
கி.பி. 1781-ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்த நினைவு போர்க்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது. பாபாஜி கோயிலும் இங்கு உள்ளது. மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மற்றும் உயராய்வு மையம் இயங்கி வருகிறது. இதில் ஆயிரகணக்கான மாணவர்கள் பரங்கிப்பேட்டையில் தங்கி கடல்வாழ் உயிரினங்கள் பற்றி பட்ட மேற்படிப்பு பயின்று வருகிறார்கள். இங்கு கடல்சார் அருங்காட்சியகம் பிரசித்தி பெற்றுள்ளது. இதனைப் பள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் மாணவர்கள் அனுமதி பெற்று அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வருகிறார்கள். தனியார் மின் துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
பரங்கிப்பேட்டைக்கு கிழக்கே வங்காள விரிகுடா கடல், தெற்கே சிதம்பரம் 23 கிமீ, வடக்கே கடலூர் 32 கிமீ, மேற்கே விருத்தாசலம் 51 கிமீ உள்ளது. பரங்கிப்பேட்டைக்கு அருகே வெள்ளாறு கடலில் கலக்கிறது. இது சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதாகும். இப்படி பெருமை மிக்க பரங்கிப்பேட்டை கடலூர் மாவட்டத்தில் 14-வது ஊராட்சிகளின் ஒன்றியமாக உள்ளது. இது 41 கிராம ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் 1 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் தொகையும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் 25 ஆயிரத்திற்குமேல் இருந்துள்ளனர். தற்போது இதிலிருந்து 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு அரசு மற்றும் தனியார் மற்றும் தனிபட்ட வேலை காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.
ஆனால் இங்குள்ள பேருந்து நிலையம் கடந்த 1990 ஆண்டுகளில் இருந்து தனியாருக்கு சொந்தமான இடத்தில் குத்தகைக்கு இயங்கி வருகிறது. மிகவும் குறுகலான தெருவில் 2 பேருந்துகள் மட்டுமே நிற்க கூடிய வகையில் உள்ளது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்வதில் மிகவும் சிரமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் நவீன வசதிகளுடன் அதிக பேருந்துகள் வந்து செல்லும் வகையில் பெரிய புதிய பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்று சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.ஏ பாண்டியன் சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானத்தை வழங்கியுள்ளார். மேலும் எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் பரங்கிப்பேட்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என்று தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.