
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. வரும் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட இருக்கிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும்,வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர இருக்கின்றனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மகா தீபத்தன்று மலை மீது சென்று மலை உச்சியில் கொப்பரை வைத்து தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்ற 5 அடி உயரமுள்ள கொப்பரை, 4500 லிட்டர் நெய், 1500 மீட்டர் காடதுணி தீபம் கோவிலில் இருந்து மலை உச்சிக்கு எடுத்துச்சென்று தீபம் ஏற்றுவார்கள்.
இதற்கிடையே திருவண்ணாமலை 2668 அடி உயரமுள்ள தீபமலை கடந்த 1ஆம் தேதி பெய்த ஃபெஞ்சல் புயல் மழையில் மலைச்சரிவை ஏற்படுத்தியது. மலையைச் சுற்றி 7 இடங்களில் இந்த மலைச்சரிவு சிறியதாகவும், பெரியதாகவும் ஏற்பட்டது. அந்த வகையில் தென்கிழக்கு பகுதியில் நடைபெற்ற மண்சரிவில் 2 வீடுகள் முற்றிலும் நொறுங்கியது. இதில் வீட்டுக்குள் இருந்த 2 பெரியவர்கள், 5 சிறுவர்கள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். அதே சமயம் பக்தர்கள் மலையேறும் வழியில் மலைமீது மண்சரிவு ஏற்பட்டது. இது பல லட்சக்கணக்கான பக்தர்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்தது.
இதனையடுத்து இந்தாண்டு மலைச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மலையேறத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மக்களிடையே எழுந்தது. இதுகுறித்து ஆராயத் தமிழ்நாடு அரசு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மண் இயக்கவியல் அடித்தள பொறியியல் துறைத் தலைவர் பிரேமலதா, புவியியல் மற்றும் சுரங்கத் துறை மண்டல இணை இயக்குநர் ஆறுமுக நயினார், இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை முதுநிலை புவியியல் வல்லுநர் ஜெயபால், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர்கள் லட்சுமி ராம் பிரசாத், சுரேஷ்குமார், அருள்முருகன், தமிழரசன் உட்பட 8 பேர் கொண்ட வல்லுநர் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. இந்த குழு கடந்த 8ஆம் தேதி மலை உச்சிவரை சென்று ஆய்வு செய்தது. இதற்கான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மகா தீபத்திற்கு 11 ஆயிரத்து 600 பேர்களை அனுமதிப்பதற்கு உண்டான அனைத்து விதமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தீபம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கடந்த மாதம் 18ஆம் தேதி தேனி கிரிவலப் பாதையைத் துணை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அமைச்சரான ஏவாவேலுவும், நானும் கிட்டத்தட்ட 3 முறை நேரில் கள ஆய்வு செய்தோம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர், தலைமையில் தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. புவியியல் மற்றும் சுரங்க துறையினுடைய இயக்குநர் சரவண வேல்ராஜ் தலைமையில் நியமிக்கப்பட்ட, பேராசிரியர் பிரேம்நாத் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழுவினர் கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களில் கள ஆய்வு மேற்கொண்டு நேற்றைக்கு அதனுடைய அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் தொடர்ச்சியாகத் தலைமைச் செயலாளர் தலைமையில், இந்து சமய அறநிலை துறையின் செயலாளர், ஆணையாளர், கூடுதல் ஆணையர் அடங்கி குழுவினர் அந்த அறிக்கையின் அடிப்படையில் அதிகமான மனிதர்களை மலையின் மீது ஏற்றக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இந்த முறை பரணி ஏற்றும்போது மலைமீது ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்குண்டான முறையான அறிவிப்பினை மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார். 300 கிலோ எடை கொண்ட திரிகள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும், 15 கிலோ எடை கொண்ட டன் மூலம் 600 கிலோ அளவு நெய் எடுத்துச் செல்ல வேண்டும். இவற்றைக் கொண்டு செல்ல வேண்டியவர்களுக்குத் தேவையான உணவு, காவலர்கள் வனத்துறை அதிகாரிகள் என மனித சக்திகள் எவ்வளவு பயன்படுத்தப்படுமோ அதன் அறிக்கையில் எவ்வளவு குறிப்பிட்டு இருக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் தான் பயன்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.