
கிண்டி கலைஞர் மருத்துவமனையில் ஏற்கனவே மருத்துவர் ஒருவருக்குக் கத்திக்குத்து நடந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது பணியில் இருந்த செவிலியருக்கும் அருவாள் வீச்சு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி கலைஞர் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் லட்சுமி. இந்த நிலையில் அதே மருத்துவமனையில் கிருஸ்டல் நிறுவனத்தின் கீழ் மருத்துவமனை பணியாளராக பணிபுரிந்து வரும் நபர் ஒருவர் சனிக்கிழமை மருத்துவமனையில் பணியின் போது வளாகத்தில் தூங்கியுள்ளார். அதனை பார்த்த செவிலியர் லட்சுமி, ‘பணியில் இப்படி தூங்கலாமா... அதுவும் வளாகத்திலே..’ என பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். பிறகு மறுநாள் அவர் உறங்கியபடி இருந்த புகைப்படத்தை மருத்துவமனை வாட்சாப் குழுவில் யாரோ பதிவு செய்துள்ளார்கள் .
இதனை லட்சுமி தான் பகிர்ந்துள்ளார் என்று தவறாக எண்ணிய அந்த நபர் காலை மருத்துவமனைக்கு சென்று செவிலியரைத் தகாத வார்த்தைகளால் திட்டி நீண்ட அருவாளை எடுத்து வெட்ட முற்பட்டுள்ளார். அதனைப் பார்த்த மற்ற பணியாளர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு புகார் கொடுக்க சென்ற செவிலியரைத் தடுத்து நிறுத்தி ஏற்கனவே மருத்துவர் பாலாஜி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சம்பவமும் வெளியே தெரிந்தால் நிச்சயம் பெரிதாக வெடிக்கும் என்று நிர்வாகத்தின் தரப்பில் இருந்து மூடி மறைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் வெளியே தெரிந்தவுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்; ஆனால் அருவாள் வீச்சு பற்றி கூறாதீர்கள். வெறுமனே தகாத வார்த்தையால் திட்டினார் என்று மட்டுமே புகார் கொடுங்கள் என்று செவிலியரிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.