Skip to main content

பட்டப் பகலில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி; சாதுரியமாகத் திருடனைப் பிடித்த பொதுமக்கள்

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

attempted burglary in broad daylight; Citizens who tactfully caught the thief

 

திருவள்ளூரில் பட்டப் பகலில் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற நபரை வீட்டுக்குள்ளேயே மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

திருவள்ளூர் மாவட்டம் தேரடி பகுதியில் உள்ள கனவல்லிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 79 வயதுடைய கிருபாகரன் என்ற முதியவர் வசித்து வருகிறார். வீட்டின் மேல்தளங்களில் அந்த முதியவரின் மகன்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கீழ் தளத்தில் இருந்த முதியவர் கிருபாகரன், கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பொழுது வீட்டில் உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அப்பகுதி மக்களை முதியவர் உதவிக்கு அழைத்தார். அப்பொழுது இளைஞர் ஒருவர் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் கதவை உடைத்து பீரோவை உடைத்துக் கொண்டு இருந்தார். உடனடியாகப் பொதுமக்கள், சத்தமிடாமல் சாதுரியமாகச் செயல்பட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து வீட்டின் வெளிக் கதவை மூடினர்.

 

உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த திருவள்ளூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார், பூட்டி வைத்திருந்த வீட்டின் கதவைத் திறந்து உள்ளே பதுங்கி இருந்த கொள்ளையனைப் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளையனிடம் விசாரணை செய்ததில், அவர் பெயர் அரவிந்தன் என்பதும், அவர் மீது ஏற்கனவே பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அண்மையில் தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்