attempted bank robbery One arrested

சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று (21.11.2024) இரவு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அப்போது வங்கியின் ஜன்னல் கண்ணாடி, இரும்பு கம்பியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வங்கியின் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள தடயங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். அதோடு வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும், வங்கி அமைந்துள்ள பகுதியில் அருகில் உள்ள மற்ற சிசிடிவி கேமரா கட்சிகளையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆவடி, வீராபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 45) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது அலாரம் அடித்ததால் சுரேஷ் பிடிபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.