Attempt to steal from cattle market Public catches two and hands them over to police

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மூடப்பட்டுள்ள கூடுதல் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமைதோறும் மாட்டுச்சந்தைக் கூடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று (26.04.2025) நடைபெற்ற மாட்டுச்சந்தையில், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாடுகளை விற்பனைக்காகக் கால்நடை வளர்ப்பவர்கள் கொண்டு வந்து இருந்தனர். இந்நிலையில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாடுகளை வாங்க வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனங்களை அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த போது, இருசக்கர வாகனங்களை இரண்டு பேர் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், இருவரையும் பிடித்து சரமாரியாகத் தாக்கி, வாணியம்பாடி நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், அப்போது காவல்துறையினர் இரு சக்கர வாகன கொள்ளையர்களுக்கு ஆதரவாகப் பேசியதால் விவசாயிகள் வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பிடிபட்ட நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, இரண்டு நபர்களும், வேலூர் மாவட்டம் சேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் தாமோதரன் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக இருவர் மீது வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் கொள்ளையடிக்க முயன்ற இருவரையும் பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.