/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ration-rice-smuggle.jpg)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் கிராமத்தில் இருந்து வயல்வெளி வழியாக சின்னபண்டாரங்குப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில், ரேஷன் மூட்டைகள் லாரியை மாற்றி கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவலர் ராஜசேகர் நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ரேஷன் மூட்டைகளை கடத்த முயன்ற மர்ம நபர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள், காவல்துறை அதிகாரியை பார்த்ததும், தலைதெறிக்க தப்பித்து ஓடி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் ஆலடி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கவியரசு, காவல் தனிப்பிரிவு காவலர் வெங்கடேசன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் விருத்தாசலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து, இளையபெருமாள் என்பவருக்கு சொந்தமான லாரி மூலம், 18 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திரா பதிவு எண் கொண்ட லாரியில் கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ration-rice-smuggle1.jpg)
அதுமட்டுமில்லாமல் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்த முயன்ற இடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தின் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதில் விருத்தாச்சலம் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கண்காணிப்பாளரின், முத்திரையுடன் கையொப்பமிட்ட ஆவணங்கள் ஏராளமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டன் கணக்கில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கக்கூடிய ரேஷன் அரிசி மூட்டைகளை, அரசு ஆவணங்களை கொண்டு அரசு அதிகாரியின் துணையுடனும் கடத்தப்பட்டதா என்றும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து, லாரி முழுவதும் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்ல உறுதுணையாக இருந்தது எத்தனை நபர்கள் என்றும், இக்கடத்தல் வேலையில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது எனவும் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ration-rice-smuggle-2.jpg)
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகள், அரசு ஆவணங்கள் மற்றும் ரேஷன் மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து, தப்பித்து ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தொடர்ச்சியாக விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், அக்கிடங்கில் பணிபுரியும் அரசு அதிகாரி உட்பட அனைவரையும் கூண்டோடு பணி நீக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)