Attack on students of Tamil Nadu; Blockade protest on behalf of Nathaka

ஆந்திராவில் தமிழக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து வாணியம்பாடி அருகே உள்ள சுங்கச் சாவடியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

Advertisment

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி.புரம் சுங்கச் சாவடியில் கடந்த 21ம் தேதி தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் வாணியம்பாடி அடுத்துள்ள நெக்குந்தி சுங்கச் சாவடியை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். முற்றுகையில் ஈடுபட்டவர்களில் 70க்கும் அதிகமானோர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களையும் மறித்தனர். வாகனங்கள் மறிக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisment

ஆந்திராவில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கடந்த 23ம் தேதி அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “தமிழ்நாட்டுக்கு வரும் அண்டை மாநிலத்தவர்களை உரிய மரியாதையோடும், பெரும் மதிப்போடும் நடத்தி, அவர்களது பாதுகாப்பையும், நலவாழ்வையும் தமிழர்கள் உறுதிசெய்துள்ள நிலையில், அண்டை மாநிலங்களில்வாழும் தமிழர்களின் பாதுகாப்பு எப்போதும் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவது உள்ளக்கொதிப்பைத் தருகிறது.

எந்தவிதத் தவறும் இழைக்காத அப்பாவிகளை தமிழர்கள் என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே நடந்த கோரத்தாக்குதலுக்கு எனது கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆந்திராவில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.