
ராமேஸ்வரத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் தாக்குதல் நடத்தியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இளைஞரின்உயிரிழப்புக்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமேஸ்வரம் அடுத்துள்ள ராமகிருஷ்ணபுரத்தில் வசித்து வந்த இளைஞர் முகேஷ். இவர் கடந்த ஐந்தாம் தேதி பங்குனி உத்திர திருவிழாவிற்காக ராமேஸ்வரம் சென்றுள்ளார். அப்போது அவரது செல்போன் தவறுதலாக கீழே விழுந்துள்ளது. அதை குறிப்பிட்ட சில நபர்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது செல்போனை எடுத்த நபர்களிடம் முகேஷ் செல்போனை கேட்டுள்ளார். ஆனால் அதற்கு செல்போனை எடுத்துக் கொண்ட நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் விலா எலும்பில் காயம் ஏற்பட்ட முகேஷ் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தொடர் சிகிச்சையிலிருந்த முகேஷ் நேற்று சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இளைஞர் முகேஷின் உயிரிழப்புக்கு நீதி கேட்டுஇந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகேஷின் பெற்றோர்மற்றும் உறவினர்கள் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 11 பேர் சம்பந்தப்பட்ட நிலையில் ஒருவரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர் என குற்றச்சாட்டு தெரிவித்த மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ளே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். மீதம் உள்ள நபர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது, கண்டிப்பாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)