Attack on the car

Advertisment

புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விஜயவேணி. இவரது சொந்த ஊர் பாகூர் அருகே உள்ள மணமேடு கிராமமாகும். இங்கு நேற்று முன்நாள் நடந்த பொங்கல் விழாவில் விஜயவேணி கலந்துகொண்டார். விழாவின் போது அவரது கார் அலங்கரிக்கப்பட்டு கிராமத்தில் வலம் வந்தது. அதில் எம்.எல்.ஏ. குடும்பத்தினர் இருந்தனர். காரை அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 40) என்பவர் ஓட்டினார்.

Attack on the car

விழா முடிந்து மணமேடு சாலையில் கார் சென்றபோது அங்கு இடையூறாக மினிவேன் ஒன்று நின்றது. அதை ஒதுங்கி நிறுத்து மாறு கார் டிரைவர் மணிவண்ணன் கூறினார். அதனால் மினி வேனில் இருந்தவர்களுக்கும், மணிவண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் குணசீலன் (வயது 48) என்பவரின் வீட்டில் இருந்து வந்த மர்மநபர்கள் திடீரென்று மணிவண்ணனை திட்டி தாக்கியுள்ளனர். அந்த தகராறின்போது எம்.எல்.ஏ. காரின் பின்பக்க கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதை அறிந்த விஜயவேணி எம்.எல்.ஏ, அவரது கணவர் வெங்கடேசன் மற்றும் ஆதரவாளர்கள் குணசீலன் வீட்டின் முன்பு திரண்டனர்.

Advertisment

தகவல் அறிந்து அங்கு வந்த பாகூர்- கரையாம்புத்தூர் போலீசாரிடம் எம்.எல்.ஏ தரப்பினர் குணசீலன் ஆட்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காரை உடைத்து தகராறு செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினர். அதையடுத்து காவல்துறையினருக்கும், எம்.எல்.ஏ ஆதரவாளர்களுக்கும் வாகுவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் குணசீலன் தரப்பை சேர்ந்த சிலரை கைது செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குணசீலன் தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். அதனால் பாகூர் சுற்றுவட்டார பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகரும், லாஸ்பேட்டை எம்.எல்.ஏவுமான சிவக்கொழுந்து தனது லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஆனந்தா நகர் பகுதியில் நேற்று நடைபெற்ற பொங்கல் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரசு சார்பில் வழங்கப்பட்ட காரில் சென்றார். நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் துணை சபாநாயகர் கலந்துகொண்ட பரிசு வழங்கும்போது, விழா மேடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரை ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் உடைத்து விட்டு தப்பியோடினர்.

கார் கண்ணாடி உடைக்கப்பட்டது அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து கேட்டறிந்தார் மேலும் லாஸ்பேட்டை போலீசாரிடம் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார்.

Advertisment

ஆளும் காங்கிரஸ் கட்சியின் சபாநாயகர் மற்றும் பெண் எம்.எல்.ஏவின் கார்கள் அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்குள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.