Atrocity of independent candidate in Erode East by-election

தேர்தல் களத்தில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இணையாக, ஊடகங்களின் கவனத்தைக் பெற பல்வேறு யுக்திகளை சுயேட்சை வேட்பாளர்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் சிலர், ஊடகங்களைக் கவர விதவிதமான வேடங்களில் வரத் தொடங்கியுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 10ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த நூர்முகமது, இறுதி ஊர்வலத்தின்போது பயன்படுத்தும் சட்டி மற்றும் மணி, பால் பாக்கெட் ஆகியவற்றுடன் வந்து மனு தாக்கல் செய்தார். 46 வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்யும் இவர், மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி இந்த வேடத்தில் வந்ததாகத் தெரிவித்தார்.

இதேபோல், தேர்தல் மன்னன் என்ற பட்டப்பெயர் கொண்ட சேலம் மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜனும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் 247வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். மதுரையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மதுர விநாயகம், ராணுவ உடையில் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

Advertisment

இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளரும், அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பு தலைவர் அக்னி ஆழ்வார், ரூபாய் நோட்டுகளால் மாலை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, இவர் தனது கட்டுத்தொகைக்காக நாணயங்களை எடுத்து வந்து அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். இவற்றை எண்ணிச் சரிபார்க்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர். இவர் ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வந்து தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.