Skip to main content

வளையல் கடைக்காரர் செய்த அட்டூழியம்! கைதான தாய், மகன்! 

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

The atrocity committed by the bangle shopkeeper!  mother, son Arrested

 

ஓமலூரில், சிறுநீரை டப்பாவில் பிடித்து பக்கத்துக் கடை வாசல் முன்பு ஊற்றியதால் ஏற்பட்ட தகராறில், வளையல் வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, தாய் மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி (55). இவர், ஓமலூர் பேருந்து நிலையத்தில் வளையல் கடை வைத்துள்ளார். இவரின் கடை அருகே ஆட்டுக்காரனூரைச் சேர்ந்த சுகுணா (51) என்பவரும் வளையல் கடை நடத்திவருகிறார். இதனால் இருவருக்குமிடையே கடுமையான தொழில் போட்டி இருந்துவந்தது. இந்தப் போட்டியால் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. 

 

வளையல் கடைகள் அருகே கழிப்பறை வசதி இல்லாததால், சுப்ரமணி சிறுநீர் கழிப்பதாக இருந்தால் கடைக்குள்ளேயே ஒரு டப்பாவில் சிறுநீரை கழித்து, இரவு நேரத்தில் கடை அருகே வெளியில் ஊற்றிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அக். 28ம் தேதி இரவு, டப்பாவில் இருந்த சிறுநீரை அருகில் உள்ள சுகுணாவின் கடை வாசல் முன்பு ஊற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

 

அதற்கடுத்த நாள், சுகுணாவும் அவருடைய மகன் சந்தோஷும் (28), தங்கள் கடை வாசல் முன்பு சிறுநீர் ஊற்றலாமா எனக் கேட்டு சுப்ரமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சந்தோஷ், திடீரென்று சுப்ரமணியை சரமாரியாக தாக்கினார். பதிலுக்கு அவரும் தாக்கினார். பின்னர், அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கிவிட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் சுப்ரமணி அங்கேயே மயங்கி விழுந்தார். 

 

அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதேநேரம், சுப்ரமணி தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி சுகுணாவும், அவருடைய மகனும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 

 

இதுகுறித்து ஓமலூர் காவல் ஆய்வாளர் குமார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் சுகுணாவும், அவருடைய மகன் சந்தோஷும் தாக்கியதில்தான் சுப்ரமணி இறந்திருப்பது தெரியவந்தது. சந்தோஷ், ஆத்திரத்தில் சுப்ரமணியின் கழுத்தைப் பிடித்துத் தூக்கியதில் தொண்டை குரல்வளை எலும்புகள் உடைந்ததால் அவர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தாய் மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

சாதாரண வாய்த்தகராறு, கொலையில் முடிந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்