
அண்மையில் திருவண்ணாமலையில் நான்கு இடங்களில் வடமாநில கொள்ளையர்களால் ஏடிஎம் மிஷினை வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைக்கப்பட்டு 70 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் போலீசாரை பார்த்ததும் தாக்கிவிட்டு தலைதெறித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காடையாம்பட்டி சந்தைப்பேட்டை பகுதி உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான 'இந்தியா ஒன்' என்ற ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் இரண்டு பெண்கள் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது தீவட்டிபட்டியைச் சேர்ந்த பெண் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தில் பெண்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் ஏடிஎம்மில் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்களைத் தாக்கிவிட்டு ஏடிஎம் மையத்தில் இருந்து அந்த கும்பல் ஓட்டம் பிடித்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட முயன்றவர்களைத் தேடி வருகின்றனர்.