
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த ஆதீனம் அரசியல் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாநகரில் உள்ள கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மற்றும் அபிராமி அம்மன் திருக்கோவில்களுக்கு அடுத்தபடியாக செல்லாண்டியம்மன் திருக்கோவில் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் கடந்த சில வருடங்களாக புதுப்பிக்கப்பட்டு நாளை கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அதோடு இக்கோவில் மஹா கும்பாபிஷேகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் உட்பட அறநிலையத்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

செல்லாண்டியம்மன் திருக்கோவில் அபிராமி அம்மன் திருக்கோவில் கட்டுப்பாட்டில் இருப்பதால், அபிராமி அம்மன் கோவிலில் இருந்து யாகசாலைக்கான தீர்த்தக் குடம் பக்தர்கள் மூலம் எடுத்து வந்து யாக பூஜை கடந்த மூன்று நாட்களாக நடந்தது. அதில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகாவியம், கணபதி, நவக்ரஹ மகாலட்சுமி ஹோமங்கள், கோ, கஜ, அஸ்வ பூஜைகள் நடத்தி தீபாராதனை நடந்தது. மாலையில் முதற்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் 3ம் கால யாக பூஜை நடந்தது.
அதையொட்டி திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணதேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் யாகசாலைக்கு வருகை தந்தார். அவரை பக்தர்கள் மலர்தூவி வரவேற்று யாகசாலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுவாமிகள் அமர்ந்து சொற்பொழிவு ஆற்றியபோது, நாடு சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து தான் செங்கோல் பெறப்பட்டது.

கடந்த 75 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடியின் பெரும் முயற்சிக்குப் பின் மீண்டும் நம்மிடம் செங்கோல் பெற்று புதிய பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது பெருமையான விசயம். அந்த செங்கோல் ஆட்சி மீண்டும் வந்துள்ளது. அதனால் மீண்டும் பிரதமராக மோடி வருவார் என்று கூறினார். ஆனால் ஆன்மீக சொற்பொழிவுக்கு வந்த திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாணதேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் அரசியல் பேசியது பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.