Skip to main content

ஆத்தூர் சிறுமி கொலை வழக்கில் நேர்மையான விசாரணை தேவை!: திருமாவளவன்

Published on 07/11/2018 | Edited on 07/11/2018

 

de


ஆத்தூர் அருகே, கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி கொலை வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சேலத்தில் கூறினார்.


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டியைச் சேர்ந்த சாமிவேல் - சின்னப்பொண்ணு தம்பதியின் மகள் ராஜலட்சுமி (14). அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபர், கடந்த அக்டோபர் 22ம் தேதியன்று இரவு 7.30 மணியளவில் சிறுமியின் வீட்டுக்குள் கொடுவாளுடன் புகுந்து, சிறுமியை கழுத்து அறுத்து படுகொலை செய்தார்.


இந்தக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலத்தில் திங்கள் கிழமையன்று (நவம்பர் 5, 2018) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது அவர் பேசியது:


சிறுமி ராஜலட்சுமியின் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது. இதன் பின்னால் சாதி வெறியும், ஆணாதிக்கமும் மட்டுமின்றி, இந்துத்துவம் என்கிற சனாதன கோட்பாடும், கொள்கைகளும் இருக்கின்றன. அதனால்தான் இதுபோன்ற வன்கொடுமைகள் நடக்கின்றன.


பால்ய விவாகத்தை இந்து மதம் ஆதரிக்கிறது. அதனால் பல சாமியார்கள் சிறுமிகளிடம் சேட்டைகள் செய்து, தற்போது சிறையில் இருக்கின்றனர். இதனை தடுக்கவே அம்பேத்கர், பால்ய விவாகத்தை சட்ட ரீதியாக குற்றமென்று சட்டம் கொண்டு வந்தார். அதனால்தான் பால்ய விவாகம் இப்போது நடைபெறுவது இல்லை. 


சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். அவரின் சகோதரிக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். கொலை வழக்கை நேர்மையாக விசாரிக்க பெண் போலீஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும். ராஜலட்சுமி குடும்பத்தினர் முன்மொழியும் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். குற்றவாளி தினேஷ்குமார் மீது உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.


முதல்வர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் உடனடியாக அவர் தனது தரப்பிலிருந்து பிரதிநிதியை அனுப்பி ஆறுதல் கூற வேண்டும். வன்கொடுமை சட்டப்படி, 8.50 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக உடனே வழங்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.


ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் நேரடியாக வசூலித்த ரூ.2.05 லட்சத்தை திருமாவளவன், ராஜலட்சுமியின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக வழங்கினார்.
 

 

சார்ந்த செய்திகள்