Aswathaman is allowed to be interrogated in police custody

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் உட்பட சுமார் 200 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் இருந்து வந்தார்.

இத்தகைய சூழலில் தான் அஸ்வத்தாமனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்குத் திட்டம் தீட்டியது எப்படி என்று அஸ்வத்தமனிடம் போலீசார் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.