/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_468.jpg)
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் அருகே உள்ள பரமத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னபாண்டி. இவர், அரசு மானியம் பெற்று வீடு ஒன்றை பரமத்தேவன்பட்டியில் கட்டி வருகிறார்.
இந்த வீட்டிற்குப் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்காக தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஊரக பகுதிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டி விண்ணப்பித்துள்ளார். தொடர்ந்து, அரசுக்குச் செலுத்த வேண்டிய மின் இணைப்பு தொகையான 2,800 ரூபாய் செலுத்தியுள்ளார். இதனையடுத்து புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக அங்கு பணியாற்றக் கூடிய மின்வாரியத் துறை உதவிப் பொறியாளர் பூமிநாதன் என்பவர் சின்னபாண்டியிடம் ரூபாய் 7,000 வரை தரவேண்டுமெனக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் கொடுத்தால் புதிய இணைப்பு தந்து விடுவதாகவும் பூமிநாதன் கூறியுள்ளார். அதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்திய சீலனிடம் நேரடியாகச் சென்று மின்வாரியத் துறை அதிகாரி லஞ்சம் கேட்பது குறித்து புகார் அளித்துள்ளார் சின்னப்பாண்டி. இந்த புகாரை அடுத்து பூமிநாதனை கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்று சின்னபாண்டியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரூபாய் 2,700 கொடுத்து அனுப்பியுள்ளனர்.
பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர் கீதா மற்றும் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் அதிகாரிகள் சின்னமனூரில் உள்ள மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அருகே மறைந்து கொண்டனர். தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சின்னபாண்டி கொண்டுச்சென்று உதவிப் பொறியாளர் பூமிநாதனிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்து உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பூமிநாதன் லஞ்சம் பெற்றதை கையும் களவுமாகப் பிடித்தனர்.
பின்னர் உடனடியாக லஞ்சம் பெற்ற பூமிநாதனை கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிய மின் இணைப்பு பெறுவதற்காக லஞ்சம் பெற்ற வழக்கில் உதவிப் பொறியாளர் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் சின்னமனூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)