Skip to main content

ஒருதலைபட்சமாக செயல்படும் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் - திமுக வார்டு உறுப்பினர்கள் புகார்!

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Assistant Director of panchayats acting unilaterally - DMK ward members complain!

 

அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் மீது புகார் கொடுத்தால் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரெங்கராஜன் நடவடிக்கை எடுக்காமல் அ.தி.மு.க.வினருக்கு ஆதரவாக செயல்படுவதாக தி.மு.க. வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் புகார் செய்கின்றனர்.

 

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநராக இருப்பவர் திருச்சியைச் சேர்ந்த ரெங்கராஜன். இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தவர். அதோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவராம். இவர், தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், அதே சமயம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் மீது புகார் வந்தால் கிடப்பில் போட்டுவிட்டு நீதிமன்றத்திற்கு செல்ல அறிவுரை வழங்குவதாகவும் தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் புகார் செய்கின்றனர்.


பாளையங்கோட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக இருப்பவர் தெய்வ வள்ளி. இவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர். இவரது கணவர் முனியாண்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் போல் செயல்படுவதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக பாளையங்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் சீனியம்மாள், காயத்ரி, அனுசுயா, முனிச்செல்வம், அழகுமலை, கலைராணி உட்பட 6 பேர் ஒன்றியக் குழு உறுப்பினர் பாப்பாத்தி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரெங்கராஜனிடம் மனு கொடுத்துள்ளனர். அங்கு எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், நேற்று திண்டுக்கல்லில் உள்ள ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விசாரிக்க வந்துள்ளனர். அப்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநர், “உங்களையெல்லாம் சந்திக்க முடியாது. நீங்கள் வெளியே சென்றுவிடுங்கள்” என கூறி அனுப்பியுள்ளார்.

 

இது குறித்து தி.மு.க. ஒன்றியக் குழு உறுப்பினர் பாப்பாத்தி கூறுகையில், “எங்கள் ஊராட்சியில் தொடர்ந்து நூறு நாள் வேலைத்திட்டம் உட்பட அனைத்திலும் முறைகேடுகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களோ, உள்ளாட்சி பிரதி நிதிகளோ புகார் அளித்தால் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கண்டுகொள்வது கிடையாது. அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர்கள் துணைத் தலைவர்களுக்கு சாதகமாகத்தான் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். இதுகுறித்து நாங்கள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் புகார் செய்ய உள்ளோம். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தகுந்த நடவடிக்கை எடுத்து ஊராட்சிகளின் உதவி இயக்குநரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்” என்று கூறினார்.


திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பேரூராட்சித் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் ஒருசிலர் அ.தி.மு.க.வினருக்கு சாதகமாக செயல்படுவதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டுவது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்