Advertisment

சொத்துக்காக பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன்... வாலிபர் அதிரடி கைது

vAsset problem with family members near salem police arrested one

சேலத்தில் சொத்துத் தகராறில், உடன்பிறந்த தம்பி என்றும் பாராமல் அவருடைய வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

சேலம், அன்னதானப்பட்டி பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் துரை என்பவரின் மனைவி கல்யாணி (58). இவர்களுக்கு சரவணன் (33), கேசவன் (28) என இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்களுக்குத் திருமணம் ஆகி, தனித்தனியாக குடும்பத்துடன் வசிக்கின்றனர். இரண்டாவது மகன் கேசவனுடன் தாய் கல்யாணி வசிக்கிறார். தாயின் பெயரில் அதே பகுதியில் 10 வீடுகள் உள்ளன. அந்த வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், மூத்த மகன் சரவணன், தனக்குச் சேர வேண்டிய சொத்துகளை பிரித்துக் கொடுக்கும்படி தாயாரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஜன. 2ம் தேதி மாலையில் சரவணன் தனது பாகத்தில் வரும் வீடுகளை பிரித்து தன் பெயரில் கிரயம் செய்து தரும்படி மீண்டும் தகராறு செய்துள்ளார். இப்போதைக்கு யாருக்கும் சொத்துகளை பாகம் பிரித்துக் கொடுக்க முடியாது எனத் தாயார் கூறியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு சரவணன், அங்கிருந்து விருட்டென்று கிளம்பி வெளியே சென்றுவிட்டார்.

சம்பவத்தன்று இரவு கேசவன் வீடு அருகே வந்த சரவணன், திடீரென்று அவர் தயாரித்துக் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை, தம்பியின் வீட்டின் மீது போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். பெட்ரோல் குண்டு, வீட்டின் கதவின் மீது விழுந்ததால், மரக்கதவு தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் சந்திரகலா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தனர். பெட்ரோல் குண்டு வீச்சில் கேசவனின் மனைவி யசோதாவின் கையில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. அவரை, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விசாரணையில், சொத்து தகராறில் சரவணன்தான் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திங்கள்கிழமை (ஜன.3) காலையில் சரவணனைக் கைது செய்தனர்.

சம்பவத்தின்போது சரவணன், குடிபோதையில் இருந்ததும், தாயார் சொத்துகளைப் பிரித்துக் கொடுக்காமல் இருப்பதற்கு தம்பிதான் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதி அவரை பழி வாங்கும் நோக்கத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

police Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe