Skip to main content

சொத்துக்காக மகன்களால் தந்தைக்கு நேர்ந்த சோகம் !

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

assest issue four arrested

 

விழுப்புரம் நகர் மன்றத்தின் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் அகமது(57). இவர், அரசு கட்டிடங்கள் கட்டும் ஒப்பந்ததாரராகவும், விழுப்புரம் பகுதியில் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார். நகரில் உள்ள அனைவருக்கும் நன்கு அறிமுகமான இவர், நேற்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். 


அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு அகமதுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அகமதுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் மருத்துவமனைக்குச் சென்று அகமதுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன்னை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்றது தனது மகன்கள் தான் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். 


இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் அகமதுக்கு ஷாருக், அசார் அலி என இரண்டு மகன்கள் உள்ளனர். ஏற்கனவே தந்தை மகன்களுக்கு இடையே சொத்து பாகம் பிரிப்பது சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. முதலில் நேற்று அதிகாலை அகமது தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணி என்ற இடத்தில் அவரது மகன்கள் இருவரும் அவரது காரை வழிமறித்து சொத்து சம்பந்தமாக தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கோபத்தில் அவரது மகன்கள் அகமதுவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். லேசான காயமடைந்த அகமது மகன்களிடமிருந்து தப்பித்துசென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை பெற்று கொண்டு அவர்களிடம் இருந்து தப்பித்து மீண்டும், சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். 


அப்போது விழுப்புரம் அருகே உள்ள ஒரு தனியார் மோட்டார் ஷோரூம் அருகே அவரது மகன்கள் இருவருடன் அவர்களது நண்பர்கள் வினோத், நேதாஜி ஆகியோர் காரில் வந்து அகமதை வழிமறித்து அவரை கடத்திச் சென்று கழுத்தை அறுத்து சாலையோரம் வீசி விட்டு  சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அகமது அளித்த இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் அவரது மகன்கள், அவர்களது நண்பர்கள் ஆகியோர் மீது ஆள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்