ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தடி நீரும், பெருமளவு விவசாய நிலங்களும் பாதிப்படைவதை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு எனது தலைமையிலான கடந்த அதிமுகஅரசில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அத்தகைய நச்சுத் திட்டங்களால் தமிழகம் ஒருபோதும் பாதிப்படையா வண்ணம் முற்றுப்புள்ளி வைத்தேன்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஒஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல. எனவே தமிழகத்தின் வளத்தை பாதிக்கின்ற ஒஎன்ஜிசி-யின் இந்த செயலுக்கு துணை போகாமல் ஆரம்ப நிலையிலேயே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.