Asian Hockey Tournament  Presenting the trophy to the Chief Minister

Advertisment

சென்னையில் 7வது ஆசிய ஆடவர் ஹாக்கிபோட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்தவுள்ள இந்தப் போட்டியில்இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான்மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கிப் போட்டி சென்னையில் மீண்டும் நடைபெறுகிறது.

ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி நடைபெற உள்ளதையொட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 20 ஆம் தேதி மெரினா கடற்கரையில் போட்டிக்கான கோப்பையை அறிமுகம் செய்து ‘பொம்மன்’ இலச்சினையை வெளியிட்டார். மேலும், ஆசிய ஹாக்கி கோப்பையினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கின்ற வகையில் ‘பாஸ் தி பால்’ எனும்கோப்பை சுற்றுப் பயணத்தைத்தொடங்கி வைத்தார். இதையடுத்து பாஸ் தி பால் கோப்பை சுற்றுப் பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று நேற்று (01.8.2023) சென்னை வந்தடைந்தது.

இந்நிலையில், இந்தக் கோப்பையை சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது தயப் இக்ராம் இன்று (02.08.2023) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Advertisment

முன்னதாக, சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் சர்வதேச அளவிலான இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 28 ஆம் தேதி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.