Skip to main content

பாராட்டுக்குரிய இலக்கிய முரடர்! -கவிதை நூல் வெளியீடு

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

 

a

 

‘கலக்கல் டிரீம்ஸ்’ பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் கவிஞர் இளையசாகுல் எழுதிய ‘பேசப்பட்டவர்களைப் பேசுகிறேன்’ என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா, சென்னை தி.நகர் தக்கர் பாபா அரங்கில் நடந்தது. நூலை கவிஞர் ஜலாலுதீன் முன்னிலையில் நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் வெளியிட, பிரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளரான மானா மக்கீன் பெற்றுக்கொண்டார். 

 

a

 

நூலை வெளியிட்டுப் பேசிய ஆரூர் தமிழ்நாடன்... ’சமூக அநீதிக்கு எதிராகக் கொந்தளிக்காதவன் படைப்பாளி ஆகமாட்டான். சமூகத்தைப் பிரதிபலிக்காத எழுத்துக்கள் இலக்கியமாகும் தகுதியையும் பெறாது. இந்த விழாவின் நாயகர் கவிஞர் இளையசாகுல்,  ஒரு கலகக்காரர். இலக்கிய முரடர். சமூக அநீதிக்கு எதிரான ஆயுதமாகத் தன் பேனாவை சுழற்றுகிறவர்.  அதனால் அவரைப் பாராட்டுகிறேன். ’முன்பெல்லாம் செத்துபோனவர்கள் ஓட்டுப்போட வருவார்கள். இப்போது அவர்கள் ஆட்சி செய்யவும் வருகிறார்கள். இவர்களால் இப்போது சிம்மாசனம் பாடையாகிவிட்டது’ என்று தன் அரசியல் கோபத்தை தைரியமாக வெளிப்படுத்தினார் கவிக்கோ அப்துல்ரகுமான். அதுபோல் இந்தக் கவிஞர் கண்ணில் படும் அநீதிகளுக்கு எதிராகக் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார். பாரதி சொன்ன ரெளத்திரத்தை இவரிடம்  இன்றைய இலக்கியவாதிகள் பழகவேண்டும்.    சமூகக் கேடுகளைக் கடுமையாகக் கண்டிக்கும் இந்தக் கவிஞர், பண்பட்ட தலைவர்கள் 46 பேரைப் பற்றி இந்த நூலில் தன் கவிதைகளால் பாட்டுமாலை தொடுத்துப் பாராட்டுகிறார். இவரைப் போன்ற கவிஞர்கள் தமிழுக்குத் தேவை’ என்று பாராட்டினார்.  

 

a

 

நூலைப் பெற்றுக்கொண்ட இலங்கை எழுத்தாளர் மானா மக்கீன் ‘இளையசாகுல் அருமையான கவிஞர். இவரை முகநூல் வழியாக அறிவேன். இவர் இந்த நூலின் முன்னுரையில் பின் நவீனத்துவம் என்ற பெயரில் புரியாத கவிதை எழுதுகிறவர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். அவரது இந்த கோபத்தை  நான் வழிமொழிகிறேன்’ என்றார் உற்சாகமாக. நூலாசிரியரான கவிஞர் இளையசாகுல் ஏற்புரையாறினார்;
இந்த விழாவில் மேலும் 6 நூல்கள் கலக்கல் டிரிம்ஸ் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டன.

-இலக்கியன்


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொங்கல் மகிழ்வாய் பொங்கட்டும்... புன்னகை என்றும் தங்கட்டும்” - கவிமாமணி ஆரூர் தமிழ்நாடன்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Poet Mamani Aroor Tamil Nadan Expressed his congratulations for pongal

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இனிய உதயம் பத்திரிகை ஆசிரியரும், கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள கவிதையில்.,

பொங்கல் மகிழ்வாய் பொங்கட்டும்!
புன்னகை என்றும் தங்கட்டும்!
எங்கள் தமிழர் வாழ்கவென
இதயம் உரக்கச் சொல்லட்டும்!

கரும்பாய் நெஞ்சம் இனிக்கட்டும்!
கனவுகள் கண்முன் மலரட்டும்
அரும்பாய் இன்றி பேரன்பும்
அழகாய் பெரிதாய் மலரட்டும்!

மஞ்சள் இஞ்சி மணக்கட்டும்!
மகிழ்வே எங்கும் பெருகட்டும்!
வஞ்சம் சேரா வாழ்வினிலே
வளங்கள் எல்லாம் சேரட்டும்!

கழனிகள் எல்லாம் செழிக்கட்டும்!
கண்ணீர் நதிகள் மறையட்டும்!
உழவைச் சுமந்த முதுகெல்லாம்
உடனாய் மகிழ்வைச் சுமக்கட்டும்!

உள்ளம் என்னும் திடலினிலே
உணர்வுப் புழுதியும் பறக்கட்டும்!
ஜல்லிக் கட்டுக் கண்களிடம்
தக்கவர் எல்லாம் வீழட்டும்!

காற்றும் கவிதை பேசட்டும்!
காதலின் ஆழம் கூடட்டும்!
ஊற்றாய் பொங்கும் பேரன்பில்
உயிர்கள் சுகமாய் நனையட்டும்!  

மனிதம் ஒன்றே நம்கொள்கை!
மகிழ்ச்சி ஒன்றே நம்பாதை!
புனிதம் என்றால் ஈகைதான்!
புன்னகை வீதியில் நம் பயணம்!

சங்கம் கண்ட தமிழன்னை
சரிதம் தொடர்ந்து எழுதட்டும்!
பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலிது
பூவாய் வாழ்த்தை இறைக்கின்றேன்.!

Next Story

திராவிட இலக்கிய வரலாற்றைத் தொகுக்க வேண்டும்!- முதல்வருக்கு ஒரு குடிமகனின் கடிதம்!

Published on 06/06/2021 | Edited on 07/06/2021

 

kavignar and senior journalist written the letter for chief minister mkstalin

 

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இலக்கியவாதியும், மூத்த பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன், முதல்வருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில் தமிழ் இலக்கிய வரலாற்றில், இன உணர்வு, மொழி உணர்வு மிக்க திராவிட இலக்கியவாதிகளும் படைப்பாளிகளும் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவதால், தமிழக அரசு புதிதாக இலக்கிய வரலாற்றைத் தொகுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் எழுதிய அந்தக் கடிதம் கீழே.... 

 

"தமிழ்நாட்டின் முதல்வர் ’செயல் புயல்’ மு.க.ஸ்டாலினுக்கு, வணக்கம். தமிழ்நாட்டு மக்களில் ஒருவனாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தங்கள் தலைமையிலான தி.மு.க. அரசு, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த வேகத்திலேயே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னை முழுதாக இணைத்துக் கொண்டு, அயராது உழைத்து வருவதை நாடே பார்த்து மகிழ்ந்து வருகிறது. இதற்கிடையே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் அசுர வேகத்தைக் காட்டி அனைத்துத் தரப்பு மக்களையும் நம்பிக்கையுறச் செய்திருக்கிறது தி.மு.க. அரசு.

 

kavignar and senior journalist written the letter for chief minister mkstalin

 

மேலும் தமிழ் மொழி வளர்ச்சி குறித்தும் அக்கறை கொண்டு, புதிய இலக்கிய விருதுகள், விருது பெற்ற இலக்கியவாதிகளுக்கு இல்லங்கள் என்றெல்லாம் மதிப்புமிகுந்த திட்டங்களையும் உங்கள் தலைமையிலான அரசு அறிவித்திருப்பது ஒட்டுமொத்த தமிழுலகத்தையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகிறது. அதற்கான நன்றியையும் வாழ்த்துக்களையும் உள்ளார்ந்த உணர்வோடு தமிழ் மக்கள் தெரிவித்து வருகிறார்கள். 

 

அரசின் இந்த விருது மற்றும் இல்லம் தொடர்பான அறிவிப்பு குறித்து, பலரும் பலவித கருத்துக்களை முன்வைத்துவரும் நிலையில், என் பார்வையில் சில கருத்துக்களை தங்கள் முன் வைக்க விரும்புகிறேன். 

 

 

kavignar and senior journalist written the letter for chief minister mkstalin

 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தமிழ் இன உணர்வுக்கு எதிரான செயல்களுக்குப் பெரிதும் இங்கே இடமளிக்கப்பட்டது. அதிலும் ஜெ’வின் மறைவிற்குப் பிறகு, டெல்லியின் தமிழ்பண்பாட்டுக்கு எதிரான படையெடுப்புகளுக்குத் தொடர்ந்து ஆரத்தி எடுக்கப்பட்டன. அதன் மறைமுக இந்தித் திணிப்பு முயற்சிக்கும்,புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நேரடியாகவே சமஸ்கிருதம் மற்றும் இந்தித் திணிப்பு நடவடிக்கைக்கும் அனுசரணையாகவே அ.தி.மு.க. அரசு கடைசி வரை இருந்து வந்தது. கடந்த அரசில், தமிழ்வளர்சித்துறையே, இந்தி வகுப்பை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.  

 

அதேபோல், தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட இலக்கிய விருதுகளும் அவர்களால் கேலிக் கூத்தாக்கப்பட்டன. இவற்றில் ஊழலும், முறைகேடுகளும் குறுக்கிட்டு, விருதுகளின் பெருமையைச் சீர் குலைத்தன. இப்படிப்பட்ட இந்த இழிந்த நிலை, தி.மு.க. ஆட்சியில் முழுதும் மாறும் என்ற நம்பிக்கை வெளிச்சம் எல்லோர் மனத்திலும் இப்போது சுடர்விடத் தொடங்கியிருக்கிறது.

kavignar and senior journalist written the letter for chief minister mkstalin

தற்போது அரசு அறிவித்திருக்கும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் தெளிவாக வரையறுக்கப்படுவதோடு, அரசின் விருதுகள் தகுதி படைத்தவர்களுக்கே கிடைத்தால்தான் அதன் நோக்கம் முழுமை அடைந்ததாக ஆகும். எனவே, தி.மு.க. அரசு, இத்தகைய இலக்கிய விருதுக்கான விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில், தமிழுணர்வும், இன உணர்வும், சமூக அக்கறையும் கொண்ட அறிஞர்கள் இடம்பெறுவார்கள் என்பதை அறிவோம். இதன் மூலம் உரிய விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால், தமிழ்ச்சமூகம் நிம்மதியடைந்திருக்கிறது.

 

விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவோர் என்ன எழுதியிருக்கிறார்கள்? எதை எழுதியிருக்கிறார்கள்? எப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கும் நோக்கத்தோடு எழுதியிருக்கிறார்கள்? அவர்களது படைப்புகள் எத்தகைய பயன்களை உருவாக்கும் என்பதை எல்லாம் கூர்ந்து கவனித்து, அவர்களை உயர்வுசெய்ய வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்கிறேன்.

 

ஆபாசக் குப்பைகளையும், விரக்தி எழுத்துக்களையும், பண்பாட்டு விரோதப் படைப்புகளையும் எழுதிக் குவிப்போர் யார் யார் என்பதை இனம் காண்பதோடு, தமிழுணர்வு மற்றும் திராவிடச் சிந்தனை கொண்ட படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் கொண்டாடப்பட வேண்டும். அவர்களின் நூல்கள் நூலகங்களில் பெருமளவில் இடம் பெற வேண்டும் என்பதும் பெரும்பாலானோரின் எண்ணமாகும்.

 

இங்குள்ள சில இலக்கிய அமைப்பினரும், நவீன இலக்கியவாதிகள் என்ற பெயரில் இயங்கிவரும் நபர்களும், தமிழால் பிழைத்த போதும் தமிழுக்கு இரண்டகம் செய்பவர்களாகவே, மொழி இன உணர்வை ஏகடியம் செய்பவர்களாகவே இருந்து வருகிறார்கள். சமூக அக்கறையுடன் கூடிய படைப்புகளைக் கூட ’பரப்புரை முழக்கம்’ என்பதாகக் காட்டி, அது ஏதோ மலினமான செயல் என்றும் நிலை நாட்டமுயல்கின்றனர். மறுமலர்ச்சிக்கு வித்திட்ட திராவிட இயக்கப் படைப்பாளர்களை,அவர்கள் தீண்டத் தகாதவர்களாகவே எண்ணி வருகின்றனர். 

 

அதனால்தான், இதுவரை எழுதப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் திராவிட இயக்கப் படைப்பாளர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ் இலக்கியத்தை, மக்கள் இலக்கியமாகவும் மறுமலர்ச்சி இலக்கியமாகவும் மாற்றியதோடு, தமிழர்களுக்கு இன உணர்வையும் மொழி உணர்வையும் ஊட்டியவர்கள் திராவிட இயக்கப் படைப்பாளர்களே. அந்த வரிசையில் போற்றத் தகுந்தவர்களான அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி பொன்னிவளவன், குடியரசு வரை, வேழவேந்தன் வரை, எவரையும்  ஏற்காமல்  இங்கொரு இலக்கியப் பிறழ்வை அரங்கேற்றி வருகின்றனர். அதேபோல் தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், சரவணத்தமிழனார் உள்ளிட்டோரும் மறக்கடிக்கப்பட்டு வருகிறார்கள். நல்ல தமிழில் எழுதிய திரு.வி.க., மு.வ., உள்ளிட்டோருக்கும் இலக்கிய வரலாற்றில் போதிய பங்களிப்பு தரப்படவில்லை.

 

kavignar and senior journalist written the letter for chief minister mkstalin

 

இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள், பாரதிதாசனைத் தவிர பெரும்பாலான திராவிட இலக்கியப் படைப்பாளர்களை ஒரு பொருட்டாக எண்ணியதாகவே தெரியவில்லை. எனவே, தமிழ் இலக்கிய வரலாற்றை தமிழக அரசே, ஒரு புலவர் குழுவை அமைத்து உருவாக்கவேண்டும். பாடத் திட்டங்களிலும் இதையொட்டிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

தங்கள் தலைமையிலான தி.மு.க. அரசு, இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறது. அது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் வளர்ச்சிக்கும், இலக்கிய வரலாற்றுக்கும் உரிய பங்களிப்பைச் செய்ய, அதன் கையில் முதல் தவணையாக, தமிழக மக்களால் ஐந்து ஆண்டுகள் தரப்பட்டுள்ளன. எனவே இனி நல்லவையே நிகழும். அனைத்துத் துறைகளும் சுடரும் என்பதால், தமிழ்நாட்டு மக்களில் ஒருவனாக அரசை இதயம் மகிழ வாழ்த்துகிறேன்." இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.