அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, அக்கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி, தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக வழக்கு பதிவாகி, கடந்த 16-4-2018 அன்று கைதானார். மிகவும் தாமதமாகவே, கடந்த 11-3-2019 அன்று, அவருக்கு ஜாமின் அளித்தது உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை.
இன்று நிர்மலாதேவி சம்பந்தப்பட்ட எந்த வழக்கும் பட்டியலிடப்படாத நிலையில், தமிழக அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் நீதியரசர்கள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வில் ஒரு முறையீடு செய்தார்.
‘ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை, நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விசாரிப்பதற்கும் இடைக்காலத்தடை விதித்துள்ளது. ஆனால், நிர்மலாதேவி சம்பந்தப்பட்ட செய்திகள் நக்கீரனில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.
அதனால், இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றமோ, வேறு ஏதாவது நீதிமன்றமோ, சிபிஐ அல்லது சிபிசிஐடி பிரிவினரோ தொடர்ந்து விசாரித்து வழக்கை முடித்து வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.’ என்று நீதியரசர்களிடம் அவர் கேட்க, ‘நிர்மலாதேவி ஏற்கனவே நீதிபதிகள் அறையில் ஆஜராகி விளக்கங்கள் அளித்துள்ளார். அவரிடம் மேலும் சில சந்தேகங்களுக்கு விளக்கங்கள் கேட்டுப்பெற வேண்டும். எனவே, வரும் 22-ஆம் தேதி, நீதியரசர்கள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வில், நீதிபதிகள் அறையில் நிர்மலாதேவி நேரில் ஆஜராக வேண்டும்.’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.