அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில், பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) மூன்றாமாண்டு மாணவர்கள் 8 பேர் மீது போதையில் வகுப்புக்கும், கம்ப்யூட்டர் ஆய்வகத்துக்கும் வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், அந்த 8 மாணவர்களையும் மூன்றாமாண்டில் பயில்வதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தங்களிடம் கல்விக்கட்டணத்தை வசூலித்த கல்லூரி நிர்வாகம் வகுப்பில் படிப்பதற்கு அனுமதிக்க உத்தரவிடக்கோரி, குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Devangar Arts College.jpg)
மாணவர்கள் தரப்பில் தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் கீழ்க்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். அதே நேரத்தில், 3-ஆம் ஆண்டிலிருந்து மனுதாரர்களை வெளியே அனுப்பினால், அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மனுதாரர்கள் தங்களின் தவறை ஏற்கெனவே உணர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கல்லூரியில் ஒழுங்காக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர். இதனால் மனுதாரர்கள், சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த வீட்டில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும். காமராஜர் இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். மாலை 4 முதல் 6 மணி வரை, கீழே குறிப்பிட்டுள்ளபடி, தமிழில் மது விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை ஏந்தி, நினைவிடத்துக்கு வெளியே பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Virudhunagar Kamarajar Illam.jpg)
● மதுவை மறந்து விடு - மனிதனாய் வாழ்ந்து விடு!
● மது அருந்தாதே - மரியாதை இழக்காதே!
● குடியை மறந்து விடு - குடும்பத்தை வாழவிடு!
● குடிப்பதை நிறுத்திவிட்டு குடிப்பவன் நட்பை ஒதுக்கிவிடு!
நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்கள் நடந்து கொள்கிறார்களா என்பதைக் கல்லூரி முதல்வர், உதவிப் பேராசிரியர் ஒருவரை நியமித்து கண்காணிக்க வேண்டும். உதவிப் பேராசிரியர், மனுதாரர்களின் செயல்பாடு குறித்து கல்லூரி முதல்வரிடம் மறுநாள் அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றதும் மனுதாரர்களிடம் உரிய கல்விக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, கல்லூரி முதல்வர் அவர்களை மூன்றாமாண்டு வகுப்பில் அனுமதிக்க வேண்டும். மனுதாரர்களின் செயல்பாட்டை விருதுநகர் டவுண் காவல் ஆய்வாளரும் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Virudhunagar Kamarajar pirantha veedu.jpg)
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறினால், மனுதாரர்கள் மீது கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஏற்கனவே எடுத்த முடிவை செயல்படுத்துவதற்கு, கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள், கல்லூரி முதல்வர் ஆகஸ்ட் 19-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தாங்கள் படிக்கின்ற கல்லூரியில் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்து மாணவர்கள் தவறிழைத்ததற்காக, கல்லூரி நிர்வாகம் முதல் காவல்துறை வரை இத்தனை மெனக்கெட வேண்டியதிருக்கிறது. வெகு சிலரே என்றாலும், போதைப் பழக்கத்துக்கு ஆளான ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தினரும் தவறை உணர்ந்து திருந்துவதற்காக, நல்லதொரு படிப்பினையாக இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us